பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

308

கூட நான் உன்னை உணர்ந்திருக்கும் அளவு தெரிந்து வைத்திருக்கிறாரா? ஒரு வினாடியில் ஏற்படும் கோபத்தாலோ மன மாற்றத்தாலோ, சுல்தான் உன்னை ராஜ சபையிலிருந்து வெளியேற்றி விட முடியும்.

இதை நினைவிலே வைத்துக் கொள். என்னைப் பொறுத்தவரை, நான் உன்னை வெளியேற்றவே முடியாத ஆளாகிவிட்டாய்! இதையும் எண்ணிப் பார். நீ என்னிடமே வந்துவிடு. இந்தக் கழுகுக் கூட்டின் பலத்தை எண்ணிப்பார். இதுவரையிலே இங்குள்ள விஷயங்களை என்னைப் பின்தொடருவோரின் மனப்போக்கின்படி அவர்களுடைய பார்வையில் கவனித்தாய். இப்பொழுது என் கண்களின் மூலமாகவே கவனித்துப் பார்” என்று ஹாஸான் பேச்சு முடிந்தது.

உமாருக்கு உடனே ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அவனுக்குத் தலைவலியாக இருந்தது. சுவர்த் துவாரத்திலிருந்து வந்த சூரிய வெளிச்சம்வேறு அவன் கண்ணுக்கு முன்னால் ஆடிக் கொண்டிருந்தது.

ஹாஸனுடன் போட்டியாகப் பேசுவது என்பது சாதாரணமானதல்ல; பயங்கரமான போட்டியாகி விடும். அவன் யோசித்துப் பார்ப்பதற்கு நேரம் கொடுப்பவனாகவும் தோன்றவில்லை. உமார் அமைதியாகிவிடவே, ஹாஸான் அவனை அழைத்துக்கொண்டு மலைப் பிரதேசத்தின் அடிப்பாகத்திற்குச் சென்றான்.

சுண்ணாம்புக் கல்லிலே இழைத்த நடைபாதை வழியாக அவன் ஒரு குகைப்புறமாக அழைத்துச் சென்றான். அந்தக் குகைக்குள்ளே மனிதர்கள் பட்டறைகளிலே வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு புறத்திலே, பெரிய பெரிய நெருப்பு அடுப்புகளும், அவற்றின் மேலே உருகிக் குழம்பாக இருந்த கண்ணாடி, கொதித்துக் குமிழி விட்டுக்கொண்டிருந்ததையும், அங்கு பலர் வேலை செய்து கொண்டிருந்ததையும் உமார் கண்டான்.

“இந்தக் கண்ணாடித் தொழிற்சாலையின் இரகசியங்களை எகிப்து தேசத்திலிருந்து தெரிந்துகொண்டு வந்தார்கள். இதுவரையிலே, கண்ணாடிச் சாமான்கள் சுல்தானின் அரண்மனையிலே மட்டும்தான் காணப்பட்டன. அவருடைய