பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

 நான்கு மணி நேரம், கிறிஸ்தவப்படைகள் துருக்கிப்படைகளின் மேல் தங்கள் அம்புகளை ஏவிப் பின்வாங்க வைத்தன. மெதுவாகப் பின்வாங்கிக் கொண்டிருந்த துருக்கிப்படைகள் திரும்பவும் சிறுகச் சிறுக முன்னேறத் தொடங்கின. துருக்க வில்லாளிகளின் அம்புகளின் ஓசை குறையவேயில்லை. இந்தத் துருக்கி தேசத்துப் பெரும் படையில் ஒரு பகுதியான அந்தக் குதிரை வீரர்கள், அந்தப் பள்ளத்தாக்கு முழுவதையும் கைப்பற்றிக் கொள்ள முடிவு செய்துவிட்டது போல் தோன்றியது.

சிறிது நேரத்தில் கொரசானியப்படைகளும் போராட்டத்தில் குதிப்பதற்கு முன்னேறத் தொடங்கிவிட்டன. போர் முரசுகள் பேரொலி எழுப்பிய அந்தக் காட்சியை உமார் சுட்டிக் காண்பித்தான். வேலைக்காரர்கள் இவர்களை அழைத்தார்கள்.

“அப்பா! அவர்களும் போரில் இறங்கிவிட்டார்கள்!” என்று ரஹீம் கூவினான். உமாரும், ரஹீமும் அவர்களோடு கலந்து கொள்ளப் புறப்பட்டார்கள். அப்பொழுது, நீண்ட வேல் ஒன்றை இழுத்துக் கொண்டு வந்த ஒரு பையன் ரஹீமின் குதிரைச் சேணத்து மிதியை பிடித்துக் கொண்டு, அல்லல்லா இல்லல்லா என்று கத்திக் கொண்டே குதிரையோடு தொடர்ந்து ஓடி வந்தான்.

தான் காத்துக் கொண்டிருந்த நேரம்வந்து விட்டதென்று ரஹீமுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவன் தன் வாளை உருவினான். ஆனால், மறுகணமே, தன் வாளை உறைக்குள் போட்டு விட்டான். கூட வந்தவர்கள், கேடயத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு முன்னேறினார்களே தவிர வாளையுருவவில்லை. “கொல்லுங்கள் கொல்லுங்கள்!” என்று கூவிக்கொண்டே, இழுத்து வந்த வேலுடன் ஓடிய பையன், குதிரையோடு தொடர்ந்து ஓட முடியாமல், கீழே, தரையில் வீழ்ந்து விட்டான். சேறும், நீரும் நிறைந்த நிலத்தின் குறுக்கே, அவர்கள் குதிரைகள் போய்க் கொண்டிருந்தன. சுமார் ஒருமணி நேரமாக ஓடிக் கொண்டிருந்துங்கூட அவர்கள் அந்த பள்ளத்தாக்கிலேயே சென்று கொண்டிருந்தார்கள். போர் செய்யும் இடம் அவ்வளவு தூரத்தில் இருந்தது. போகும் வழிகளில், சகதிகளில், பாதிபுதைந்த உடல்களும், வெட்டுப்பட்ட முண்டங்களும் ஆங்காங்கே கிடந்தன. அவற்றைக் கண்ட குதிரைகள், மிரண்டு விலகித் திசைமாறித் திரும்பி ஓடின. ஆளில்லாத குதிரைகளும் அவர்களைப் பின்பற்றி ஓடிவரத்