பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

ஆண்டுதோறும் கப்பங்கட்ட வேண்டுமென்ற கட்டுப்பாட்டின் பேரில் நான் உம்மை விடுதலை செய்கிறேன். எல்லாவிதமான மரியாதைகளுடனும் படைவீரர்களுடனும் உம்முடைய தேசத்திற்கு நான் உம்மை அனுப்பி வைக்கிறேன்” என்று முடித்தார். இளஞ்சிங்கம் பெருமூச்சு விட்டுக்கொண்டே, தன் இருக்கையில் சாய்ந்தான்.

நிசாப்பூரைச் சேர்ந்த அந்த இளம் மாணவன் அவனுக்குச் சொன்ன சோதிடம் பலிக்க வேண்டுமானால் கிறிஸ்தவ அரசன் அந்த இடத்திலேயே கொலையாளியால் கொல்லப்பட்டிருக்க வேண்டாமோ?

இளஞ்சிங்கத்தின் கனவு - இப்படி ஆயிற்று.


7. அடிமைக்கும் கவலைகள் ஆயிரம் உண்டு!

உமார் தூங்க முடியாமல் புரண்டு கொண்டிருந்தான். உடம்பு களைத்துப் போய் இருந்தாலும்கூட மனம் அலைபாய்ந்து கொண்டேயிருந்தது. தன் நண்பன் ரஹீம் சாகும்போது புது மாதிரியாகப் புன்னகை புரிந்த அவனுடைய முகம் உமாரின் மனக்கண்ணை விட்டு நீங்கவேயில்லை.

நண்பர்கள் இருவரும் ஒரு தாய் வயிற்றிலே பிறந்த இரட்டைக் குழந்தைகளைப் போல் ஒட்டிப் பழகியவர்கள். வழிநெடுக எல்லாவற்றையும் பங்கு போட்டுக்கொண்டு அனுபவித்தவர்கள். இப்போது தன் உடம்பில் சரிபாதி போலிருந்த நண்பன் செத்துப் போய்விட்டான்! இனி என்ன செய்வது? எதைப்பற்றியும் கவலைப்படாதவனாக இருந்துவந்த உமாருக்கு இப்பொழுது ரஹீமுக்குப் பதிலாக அவனுடைய பணியாட்களை நடத்தும்முறை தெரியவில்லை. ஆனால் பணியாட்களோ தங்கள் எஜமானன் இறந்துவிட்ட பிறகு உமாரிடமிருந்தே உத்தரவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

போரில் வெற்றி கண்ட அராபியர்களும் மற்றவர்களும் கொள்ளைப் பொருள்களோடும், பிடிபட்ட அடிமைகளோடும் தத்தம் பகுதிகளை நோக்கிப் பயணப்படத் தொடங்கினார்கள். உமாரும் நிஜாப்பூருக்குப் புறப்பட வேண்டிய காரியங்களில் ஈடுபட வேண்டியவனானான்.