பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

கூட்டி வந்திருந்தார். அந்த அதிகாரி முறியடிக்கப்பட்டு அவரிடமிருந்து அழகி ஸோயி பறிக்கப்பட்டு எதிரிகளின் கையில் சிக்கிக் கொண்டு விட்டாள். இவ்வளவுதான் அவளுடைய கதை!

‘நான் அந்தக் கறுப்பு குதிரையில் ஏறி வருகிறேன். அழகி ஸோயிக்கு என்னுடைய குதிரையைக் கொடுங்கள்!’ என்றான் உமார். வீர மரணம் அடைந்த, செல்வனான தன் நண்பனின் கறுப்பு குதிரையில் ஓர் அடிமைப்பெண் ஏறிவரக் கூடாதென்று நினைத்தான் போலும்.

அழகி ஸோயி முக்காடு போட்டுக் கொண்டு, உமாருக்குப் பின்னாலே வந்துங்கூட, வழியில் கண்டவர் எல்லாம், அவளுடைய உடையையும், பழுப்பான கூந்தலையும் பார்த்து, அவள் போரிலே பிடிபட்ட ஓர் அடிமைப்பெண் என்றும் அவள் அருகில் தனியாகவும் அமைதியாகவும் வரும் வீரனுடைய உடைமை என்றும் எண்ணிக் கொண்டார்கள்.

நீண்டவழிப் பயணத்தின்போது, முதன்முதலாக இரவிலே தங்குவதற்காக அவர்கள் பிடித்த இடம் மிகவும் வசதிக் குறைவாக இருந்தது. ஒட்டகப்பாதை முழுவதும் ஒரே கூட்டம்! ஏராளமான படைகளோடு முகாமிட்டிருந்த ஒர் அமீரின் கூடாரத்திற்கு அருகில், ஒரு சுனை நீர்க்கிணற்றின் பக்கத்தில் உமார் தன்னுடைய கூடாரத்தை அமைக்கும்படி நேரிட்டது. அவனுடன் வந்த வேலைக்காரர்களோ, எந்த விஷயத்தையும் சொல்லாமல் செய்வதேயில்லை என்றிருந்தது. குதிரைகளை எங்கு கட்டவேண்டுமென்றும், அமீருடைய ஆட்களிடம், பேரம் பேசி ரொட்டியும் பார்லியும் வாங்கி வருவது எப்படி என்றும் அவன் ஒவ்வொன்றும் அவர்களுக்குச் சொல்ல வேண்டியிருந்தது. அந்த இரவில் உமார் படுத்துறங்கப் போகும் சமயத்தில் ரஹீமின் நினைவு அவன் மனத்திலே வந்து நிறைந்து கொண்டது.

கூடாரம் நட்டு வைத்திருந்த கம்பின் அருகிலே நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. அது அடங்கிச் சாம்பலாகும் வரையில், படுக்கையில் உட்கார்ந்தபடி உமார் விழித்துக் கொண்டேயிருந்தான். முதல் நாள் காலையில் குடித்த மது சிலமணி நேரங்கள் அவனைத் தன்னை மறக்கச் செய்திருந்தது அவனுக்கு நினைவுக்கு வந்தது. ஆனால் இப்பொழுது