பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

பிரதிநிதிதான் டுன்டுஷ் என்றும், முத்துக்களையும், அழகிய வேலைப்பாடுள்ள பீங்கான் சாமான்களையும், பழைய கையெழுத்துப் பிரதிகளையும் அவன் சேகரித்து வருகிறான் என்றும் அவர் கேள்விப் பட்டிருந்தார். ஆனால் டுன்டுஷ் என்ன பதவியில் இருக்கிறான் என்பதோ, எங்கு குடியிருக்கிறான் என்பதோ அவருக்குத் தெரியாது.

அலி அவர்களின் கணித நூல் எவ்வளவு தூரம் பூர்த்தியாகியிருக்கிறது என்பதைப் பற்றிச் சுமார் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, உமார்கயாம் என்ற மாணவன் ஒருவனைப் பார்க்க வேண்டுமென்று டுன்டுஷ் சொன்னான். தோட்டத்திலிருந்து உமார் அழைத்து வரப்பட்டான். உள்ளே நுழைந்த உமார் அந்த அறையின் ஒரு மூலையிலே, கையைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தான். பேராசிரியர் அலி காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு, டுன்டுஷையும், உமாரையும் சந்தேகத்தோடும் கலவரத்தோடும் கவனித்துக் கொண்டிருந்தார்.

டுன்டுஷ் அழுத்தம் திருத்தமான குரலில், “கடந்த மாதம் ஒரு விசித்திரமான செய்தி வந்தது. கிறிஸ்துவர்களின் பேரரசனான ரோமானஸ் யாஜீன்ஸ், தன் நாட்டு மக்களாலேயே பிடித்துத் தாக்கப்பட்டுக் கண் பிடுங்கப்பட்டு கொடுரமாகக் கொல்லப் பட்டானாம்!” என்று கூறினான். உமாரின் முகம் சுருங்கியது. போரும் போரில் இறந்த அவன் உயிர்த் தோழனின் நினைவும் மனதில் தோன்றியது.

“போரில் பிடிபட்ட அந்தப் பகையரசனை நமது சுல்தான் அவர்கள் உயிரோடு விட்டதே அதிசயம், அதைக் காட்டிலும் அதிசயம், அந்த அரசன் தன் மக்களாலேயே கொல்லப்படுவது. இப்படிப்பட்ட ஒன்றை முன்னதாகவே தெரிந்து சொல்ல யாரால் முடியும்” என்று டுன்டுஷ் கேட்டுவிட்டு உமாரை நோக்கினான்.

தன்னிடமிருந்து, பதிலை எதிர்பார்க்கிறான் என்று உணர்ந்த உமார் “ஒருவராலும் முடியாது” என்று கூறினான்.

சிறிது நேரத்திற்குப் பிறகு உமார் கயாமை வெளியே அனுப்பிவிட்டார்கள். அவன் போன பின், டுன்டுஷ் மெல்லப் பேராசிரியர் அலியை நோக்கி, “சோதிடக் கலையை நீங்கள் நம்புகிறீர்களா? பின்னால் நடக்கப் போவதை யாராலும் முன்னால் சொல்லி விட முடியுமா?” என்று கேட்டான்.