பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

64

விதமான கணித பிரச்சனைகளுக்கும் விடைகாணக்கூடிய அபூர்வ சக்தியொன்று அவனிடம் இருக்கிறது. ஆனால் அது எது என்று எனக்குத் தெரியவில்லை. இந்த அபூர்வத் திறமையைக் கொண்டு அவன் என்ன செய்வானென்று கூற முடியவில்லை. ஏனெனில் அவன் இன்னும் தன் கற்பனைக்கு அடிமையாகவே இருக்கிறான்.

என் வீட்டிலே வளர்ந்த அவனுடைய இந்த அறிவுத் திறனை தாங்கள் அறிந்த ஆதரவாளராக ஏற்றுக் கொள்ளும்படி செய்யுமாறு வேண்டுகிறேன். மேற்படி ஆதரவாளர்களுக்குத் தன்னை ஆட்படுத்திக் கொண்டவன் அடியவன் அலி.”

மை உலர்ந்த பிறகு, கடிதத்தை மடித்து தன்னுடைய முத்திரையைப் பதித்து “டுன்டுஷ் பெருமகனார், தாக்கின் வாசல், நிஜாப்பூர்” என்று முகவரி எழுதினார்.


11. காத்திருந்தவளுக்கு ஆத்திரம் பொங்கியது!

அடுத்தநாள் வெள்ளிக்கிழமை அன்று காலையில், பேராசிரியர் அலி அவர்கள் கொடுத்த கடிதத்தை வாங்கிக் கொண்டு நிஜாப்பூரை நோக்கிப் பயணம் புறப்பட்டான். கால்நடையாகவே போய்க் கொண்டிருந்த உமார் வழியில் உப்பு ஏற்றிக் கொண்டு போகும் ஒட்டகச் சாரி ஒன்றைக் கண்டான். ஒட்டகங்களை நடத்திக்கொண்டு சென்ற அந்த மனிதர்கள் இரக்கப்பட்டு, உமாரைத் தங்கள் கழுதைகளில் ஒன்றின்மேல் ஏறி வரச் சொன்னார்கள். அவர்களுடன் பேசிக்கொண்டும் அவர்கள் பாடிய தில்லானாப் பாடல்களைக் கேட்டுக் கொண்டும், சென்றபடியால் கொளுத்தும் வெயிலின் கொடுமையையும் பொறுத்துக் கொண்டு போக முடிந்தது.

நிஜாப்பூருக்கு வந்தவுடன் அவன், நேரே தக்கின் வாசல் என்கிற இடத்திற்குப் போனான். ஒரு மசூதிக்கும் தக்கின் வாசலுக்கும் இடையேயுள்ள சந்தில் வரிசையாக உள்ள இறைச்சிக் கடைகளில் ஒன்றில் உட்கார்ந்து உமார் வறுத்தக்கறியும் கவாபும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். காலை முதல் வெயிலில் பிராயணம் செய்து, அலுத்துப் பசியோடிருந்த அவனுடைய உடல் தளர்ச்சி, சாப்பிட்டவுடன் குறைந்தது. அந்தச் சந்தில் வெயில் குறைந்து