பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

அனைத்தையும் சொல்லிக் கேட்டார். அவருடைய குரல், பொதுக் கூட்டங்களிலே நீண்ட நேரம் சொற்பொழிவாற்றக் கூடிய, ஒரு சொற்பொழிவாளருடையதைப் போலப் பெருமிதமானதாகவும், கவனத்தைத் தன்பால் இழுக்கக் கூடியதாகவும் இருந்தது.

டுன்டுஷ் உமாரை விட்டு விலகியிருந்தான். எதுவுமே பேசவில்லை.

“பேராசிரியர் அலி, உன்னிடம் ஏதோ விசித்திர ஆற்றல் இருப்பதாக எழுதியிருக்கிறார். அல்லாவின் ஆற்றலைத் தவிர வேறு எவ்விதமான ஆற்றலும் இந்த உலகத்திலே கிடையாது. ஆனால், நீ எந்த விதமான தெய்வீக சக்தியைக் கொண்டு, முன்பு இளவரசராயிருந்த நம் சுல்தான் அவர்களுக்குச் சோதிடம் சொன்னாய் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். மாலங்கார்டில் நடந்த போரின் முடிவைப் பற்றியும், கிறிஸ்தவப் பேரரசரின் சாவைப் பற்றியும், புகழுக்குரிய நம் பெரிய அரசருடைய முடிவைப் பற்றியும் நீ எவ்வாறு முன்கூட்டியே சொன்னாய்? சொல்” என்றார். உமாரின் முகம் குருதியோடிச் சிவந்தது. ஏதாவது பொருத்தமான கற்பனை யொன்றைக் கூறினால் என்று யோசித்தான். கூரிய பார்வையும் கடிய குரலும் கொண்ட அவர் எந்த விதமான ஏமாற்றுதலையும் எளிதில் உடைத்துவிடுவார் என்பது தெரிந்தது.

“மேன்மை தங்கிய அமைச்சர் அவர்களே, உண்மையாகச் சொல்லப் போனால், அது அர்த்தமற்றது.”

“எது அர்த்தமற்றது? விளக்கமாகக் சொல் - அது அர்த்தமற்றதாக இருக்க முடியாது” என்று தன் பொறுமையிழந்து நிசாம் பொங்கினார்.

உமார் தன்னைத் திடப்படுத்திக் கொண்டான். பிறகு மெதுவாக தன் திடமான குரலில் “உள்ளபடியே அது அர்த்தமற்றதுதான்! அன்றைய இரவில், படைவீரர்களின் கூடாரங்களைப் பார்வையிட்டுக் கொண்டே நடந்து சென்றேன். அப்படிச் செல்லும்போது, துருக்கிய வீரர்கள் காவல் புரிந்த ஒரு கூடாரத்திற்குச் செல்ல நேரிட்டது. அவர்களுடைய பேச்சும் எனக்குப் பெரும்பாலும் புரியவில்லை; அங்கிருந்தவர் இளவரசர் என்றும் எனக்குத் தெரியாது. அவருடன் கூட இருந்த அறிஞர்கள், மூடத் தனமான ஒருதவறு செய்தார்கள். ஏதோ