பக்கம்:உமார் கயாம் (புதினம்).pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

93

பட்டுத்திரை யொன்றை அந்தக் கூடத்தின் இடையிலே தொங்கவிட்டான். அதிலே பறக்கும் நாகத்தின் படம் நடுவில் கொடுக்கப்பட்டிருந்தது. மின்னி யொளிவிடும் தங்கச் சரிகைக் கரையுடைய அந்தப் பட்டுத் திரையின் பின்னாலே அவனுடைய படுக்கையும் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய, சந்தனக் கட்டையால் செய்யப்பட்ட அலமாரி ஒன்றும் வைக்கப்பட்டன. அந்த அலமாரியிலே அவனுடைய ஆடைகளையும் பிற பொருள்களையும் வைத்துக் கொண்டான்.

மூன்றாவது தளத்தில், சில மேசைகளும், புறாக் கூடுகள் போன்ற அமைப்புள்ள அலமாரிகளும், இருந்தன. இந்தத் தளமே அவனுடைய ஆராய்ச்சிக்கூடமாக விளங்கும். மேசைகளில் வேலைகள் நடக்கும். கூடுள்ள அலமாரியில் கையெழுத்துப் படிகள் வைக்கப் பெறும். அவன் கேட்டிருந்த கருவிகள் முழுவதும் வந்து சேரவில்லை. ஏனெனில் அவை நிசாப்பூரில் கிடைக்கக்கூடிய சாதாரணக் கருவிகள் அல்ல. பாக்தாது தேசத்திலிருந்து வரவழைக்க ஏற்பாடு செய்திருப்பதாக டுன்டுஷ் கூறினான். நிசாம் அல்முல்க்கின் அன்பளிப்பாக ஏராளமான புத்தகங்களை டுன்டுஷ் கொண்டு வந்திருந்தான்; அவை யாவும் அலமாரிகளில் வைக்கப்பட்டன.

ஆராய்ச்சி செய்யவேண்டும் என்ற எண்ணமே உமாருக்கு அப்பொழுது ஏற்படவில்லை, யாருமில்லாத போது யாஸ்மியை அழைத்து வந்து அவளை ஆச்சரியத்தால் திணறடிக்க வேண்டும் என்ற எண்ணமே எழுந்தது. பெரும்பாலும் கோபுரத்து வாசல் கதவைப் பூட்டிச் சாவியைக் கையில் எடுத்துக் கொண்டு நிசாப்பூர்க் கடைத் தெருக்களையும் அங்காடிகளையும் சுற்றிவந்தான். கையிலிருந்த வெள்ளிக் காசுகளையெல்லாம் கடைகளிலே அள்ளியள்ளிக் கொடுத்தான். அதற்குப் பதிலாக, தன்னை மணம்புரிந்த பிறகு, யாஸ்மி உடுத்திக் கொள்வதற்காகப் பலவிதமான பட்டாடைகளை வாங்கினான். அவளுக்கு மிகவும் பிடித்தமான துல்லியமான வெண்பட்டுத் துகில்களை ஏராளமாக வாங்கினான். சீனியில் பதஞ்செய்யப்பட்ட பழங்கள் அடங்கிய பீங்கான் சாடிகளை வாங்கினான். மணங்கமழும் புகை எழுப்பும் பலவிதப் பொடிகளையும், தெளிந்த வானம் போன்ற நிறமுடைய நீலமணிக் கற்கள் அடங்கிய வெள்ளிப் பெட்டியொன்றும் வாங்கினான்.