பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



நா.வானமாமலை
17

1925-இல்தான் வெளியிடப்பட்டது). ஸ்டாலின் மேற்கூறிய கருத்தை வெளியிட்டார். அக்காலத்தில் விஞ்ஞானிகள் உயிர் தோன்றியதைப்பற்றி யாந்திரீகமான கருத்துகளைக் கொண்டிருந்தார்கள். ஆனால் தெளிவாக அதை எதிர்த்தவர்களும் இருந்தார்கள். உதாரணமாக ரஷிய விஞ்ஞானி கே.ஏ. டிமிரியஸேவ் 1912-இல் ‘விஞ்ஞான வரலாற்றிலிருந்து” என்ற கட்டுரையில் கீழ்க்கண்டவாறு எழுதினார். “பிற பொருள்களின் சலன முறைபோலவே உயிர்ப்பொருள்களின் சலனமும் இருந்திருக்க வேண்டும் என்ற உண்மையை நாம் ஒப்புக் கொண்டு ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. பரிணாமக் கொள்கை உயிர்நூலுக்கு மட்டுமில்லாமல் எல்லா விஞ்ஞானத் துறைகளுக்கும் (பெளதீகம், ரசாயனம், வானநூல், பூமி இயல்) பொருந்துகிறது என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். அதே முறையில்தான் உயிரற்ற பொருள், உயிருள்ளதாக மாறியிருக்கவேண்டும் என்று நிச்சயமாகச் சொல்லலாம்.” இந்த நாட்டில் வெளியானநூல்களின் வி.எல். கோமராவ் எழுதிய “செடிகளின் தோற்றம்” என்ற நூல் குறிப்பிடத்தக்கது. உயிர் ஆதியற்றது என்ற கூற்றை அவர் மறுக்கிறார். விண்ணின் இடைவெளியில் எக்காலத்திலும் நுண்ணுயிர்கள் இருந்தன என்ற எண்ணத்தையும் அவர் மறுக்கிறார். “பொருளின் சிக்கலான பல மாறுதல்களின் தொடர்ச்சியில் ஒரு கட்டத்தில்தான் உயிர் தோன்றிற்று. இம்மாறுதல்களில் கரியால் ஆக்கப்பட்ட பொருள்களும், ஹைட்ரஜனும் முக்கிய பங்கு பெற்றுள்ளன என்று அவர் எழுதியுள்ளார். பொருள்களின் பரிணாம மாற்றக் கொள்கை சோவியத் விஞ்ஞானிகளால் மட்டுமல்லாமல், பல நாடுகளிலுமுள்ள விஞ்ஞானிகளால் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் மேல்நாட்டு இயற்கை விஞ்ஞானிகள் உயிர் தோன்றியதற்கு முன்புள்ள காலத்தில் நிகழ்ந்த மாறுதல்களுக்கு மட்டும் பரிணாம முறையை ஒப்புக்கொள்ளுகிறார்கள். உயிர் தோன்றியதற்குப் பின்புள்ள காலத்தில் நிகழ்ந்த மாறுதல்களுக்கு இம்முறையைக் கையாண்டு விளக்கம் காண மறுக்கிறார்கள்.