பக்கம்:உயிரின் தோற்றம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. வானமாமலை

75


ரசாயன அமைப்பு நிலையாக இருக்கும் நிலைமை ஏற்பட்ட பின்னர், துளிகளின் அமைப்பிலும் நிலையானதன்மை உண்டாயிற்று. ஒரு குறிப்பிட்ட வகையில் பகுதிகள் இணைக்கப் பட்டால் ‘ஏதோ ஒரு வகையில்’ என்றில்லாமல் குறிப்பிட்ட ஒழுங்கான அமைப்பு அதற்கு அமைகிறது. ஆகையால் முதலில் கோயசர்வேட்டுகள் வெளித்துண்டுதல்களுக்கு ஈடுகொடுக்கும் சக்தியில்லாத முறையில் நிலையுள்ளதாக இருந்தால் அவற்றிற்குப் பதில் நிலையான உள்ளமைப்பில் ஒழுங்குள்ள துளிகள் தோன்றின. அத்துளிகள் என்ஸைம்கள் பங்குகொள்ளும் ரசாயன மாறுபாடுகளில், கூட்டு மாறுதல்கள், சிதைவு மாறுதல்களைவிட முனைப்பாக நடக்கச்செய்யும் சக்தியுடைய உள்ளமைப்புப் பெற்றிருந்திருக்க வேண்டும்.

பல மாறுதல்களின் இணைப்பு, குறிப்பிட்ட வாழ்க்கை நிலைமைகளில் உயிர் நிகழ்ச்சிகளை நிகழ்த்தும் தன்மை பெற்ற அமைப்பு, (இதுதான் உயிருள்ளவற்றின் அமைப்பின் சிறப்பான தன்மை) ஆகிய படிகளுக்கு பரிணாமப் பாதை இதுதான்.

தற்காலத்தில் வாழும் மிகமிகச்சிறிய உயிருள்ள பிராணியின் அமைப்பை ஆராய்ந்து முற்கூறிய துளிகள் மேலும் சிக்கலாகி எவ்வாறு பூரணமாகியுள்ளன என்பதை நாம் அறியலாம். இந்நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி, பொருளுக்கு, ஒரு புதிய உருவத்தை அளித்தது. இக் குண மாறுதலின் காரணமாக உலகில் மிகச்சிறிய உயிர் தோன்றிற்று.

முதலில் தோன்றிய உயிர்கள் தற்கால [1]புரோட்டோ ஸோவாவை ஒத்திருந்தன. இன்று நாம் காணும் ஒற்றை ஜீவ அணுவைவிட முதலில் தோன்றிய உயிர்கள் சுலபமான அமைப்புடையவையாக இருந்த போதிலும், அவை கோய சர்வேட் துளிகளைவிடச் சிறந்தவை. ஆனால் அவற்றிற்கு ஜீவ அணுவின் சிறந்த அமைப்பு இருக்கவில்லை. வாழ்க்கையின் வளர்ச்சியில் பிற்பட்டகாலத்தில் செல் அமைப்பு தோன்றியது.


  1. புரோட்டோஸோவா - ஒற்றையங்கமுடைய மிகச் சிறிய உயிர்ப் பிராணி. இவை ஒற்றை ஜீவ அணு உயிர்கள் படத்தைப் பார்க்கவும்.