பக்கம்:உயிரில் கலந்தது.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91

கையில், அவர் உப்பை இனியும் தின்னலாமா? இனி நடக்க வேண்டிய பிழைப்புக்கு திரையுலகம் உதவினால் நல்லது தான். அம்மா, வாணி இருவரையும் அழைத்துப் போய்ப் பட்டணத்தில் குடித்தனம் ஆரம்பித்து விடலாம்.’

இவ்வாறு ஆனந்தமான மனோலயப் பின்னணியில் உட்கார்ந்திருந்தார் ஞானசீலன். மகிழ்வில் பூத்த மனம் சுந்தரக் கனவுகளைப் பின்னின.

மெல்லிளங் காற்று பூமணத்தைச் சுமந்து வந்தது. பூமணம் பூவையைச் சுமந்து வந்தது. வாணி வந்தாள். அவளுடன் அமுதச் சிரிப்பு வந்தது; கவின்மிகு பார்வை வந்தது.

‘வா, வாணி,’ என்று உபசரித்து, ‘காப்பி எல்லாம் ஆகி விட்டதா?’ என்று விசாரித்தார்.

“ஆமாம்...ட்யூஷன் முடிந்தது. இனிமேல் ஸ்கூலுக்குப் போக வேண்டும். வழியில் பார்த்துவிட்டுப் போகவேண்டு மென்று வந்தேன்.”

“அப்படியா? நல்லது!” என்று மொழிந்தார். ஆனந்தத்துக்குரிய திரைக் கடிதத்தை வாணியிடம் சமர்ப்பித்தார்.

அவள் ஆனந்தக் கடலானாள்!

“எல்லாம் உங்கள் திறமையின் அதிருஷ்டம்!”

“அப்படியா? பேஷ், பேஷ்! எல்லாம் நீ என் துணைவியாக வரப்போகிற அதிருஷ்டம் என்றல்லவா நினைத்தேன்!” என்று பதிலுரைத்துக் கொண்டிருக்கும்பொழுது, ஏன் அவளது அழகு முகம் அப்படிச் சிறுத்துக் கறுத்தது?...

இம்மாற்றத்தை அவர் கவனிக்கவில்லை. ஆனால், அவருடைய உள்மனம், வாணி தன் மனசுக்கு இனியவளான அந்த வரலாற்றை நினைந்து நினைந்து நெருக்குருகியது. தன் அன்னையின் பாசத்தைக் கவர்ந்துவிட்ட வாணி, பிறகு தம்மையும் ஈர்த்த தன்மையை எண்ணினார். அதற்குள், ‘என்னை நீங்கள் காதலிக்கிறீர்களா?’ என்று சுட்டித்தனமாகக் கடிதம்