பக்கம்:உருவும் திருவும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பன் கட்டிய கலைக்கோயில் 101

இறுதியாக, கம்பனின் நன்றிமறவா நல்லுணர்வினைக் காண்போம்:

எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு

-திருக்குறள்: 110.

என்றார் வள்ளுவர். அதன்படியே கம்பனும் தன்னை ஆதரித்த வெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளலைத் தான் இயற்றிய இராமாயணத்தில் தக்க இடங்களில் போற்றிப் புகழ்கின்றான். கதையின் இறுதியில், இராமன் முடிசூட்டு விழா நடைபெறு கின்றது. அதுபோது சடையப்ப வள்ளலின் மரபில் வந்த பெரியவர் ஒருவர் திருமுடியினை எடுத்துத் தர, வசிட்ட முனிவர் இராமனுக்கு அம் முடியைப் புனைகின்றார் என்று கூறிக் கதையை முடிக்கின்றார் கம்பர்.

அரியணை அனுமன் தாங்க அங்கதன் உடைவாள் ஏந்தப் பரதன் வெண்குடை கவிக்க இருவரும் கவரி பற்ற விரிகடல் உலகம் ஏத்தும் வெண்ணெய்மன் சடையன்வண்மை மரபுளோன் கொடுக்க வாங்கி வசிட்டனே புனைந்தான் மெளலி. -கம்ப. யுத்த காண்டம். திருமுடிசூட்டு படலம்: 16.

இவ்வாறு கம்பன் கட்டிய கலைக் கோயிலில் காவிய நலங்கள் பலவும் கண்டு மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கலாம்.