பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

பதிப்புரை



இந்த வகையில்தான் அறிவியல்-தொழில் நுட்பம், ஆட்சியியல் போன்ற பிற துறைகளின் மொழியமைப்புகளும்.

தொடக்கத்தில் பயன்படுத்தும்போது, தகுந்த சொற்கள் கிடைக்காமை, சொற்றொடரமைப்புச் சிக்கல்கள், எளிமையின்மை, நெகிழ்ச்சியின்மை, கலைச் சொற்களை உருவாக்குதலில் தடை, கலைச் சொற்களைப் பயன்படுத்துவதில் நிலைத்த தன்மையின்மை என்பன போன்ற தொல்லைகளும் தடைகளும் தோன்றும் என்றாலும், தொடர்ந்த முயற்சிகள்-முனைப்புகள் முழுமையான பயனைத் தரும்.

அரசு அலுவலகங்களில்கூட கோப்புகளில் எழுதப்படும் குறிப்புகளை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்றியபொழுது சிக்கல்கள் எழுந்தன. இன்று அவை களையப்பட்டு வருகின்றன.

ஆங்கில மரபுக்கேற்ப, அம்மொழி பேசுகின்ற நாட்டின் சமூக-பொருளாதார-பண்பாட்டு நிலைகளுக்கொப்ப, சில வகையான சொற்றொடரமைப்புகள் உருவாகியுள்ளன. தமிழ் மரபுக்கேற்ப, தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார-பண்பாட்டுப் பழக்கங்களுக்கு உரியவாறு நாம் நமது உரைநடை அமைப்பைப் பயன்படுத்தவேண்டும்.

பிறருக்கான அரசு மடல்களில், முகவரியினை முதலில் எழுதிய பின்னர் “He is advised to pay his fees immediately” என்று குறிப்பிடுவார்கள். இந்த ஆங்கில மரபைப் பின்பற்றி “அவர் உடனடியாகத் தனது கட்டணத்தைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்” என்று தமிழில் எழுதுவதைப் பார்க்கிறோம். மாறாக, “தாங்கள் தங்கள் கட்டணத்தை உடனடியாகச் செலுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று எளிதாகத் கூறிவிடலாம். காலமும் தேவையும் வேண்டிய சொற்களையும் சொல்லுகின்ற முறைகளையும் தாமாக உருவாக்கிக் கொடுத்துவிடும்.

சர்வகலாசாலை. உப அத்யட்சகர், ஜில்லா, அபேட்சகர், அக்ராஸனர் எல்லாம் மாறி, இன்று பல்கலைக்கழகம், துணை வேந்தர், மாவட்டம், வேட்பாளர், தலைவர் என்று பயின்று வருவதைப் பார்க்கிறோம். இந்தத் தலைமுறையினருக்குப் பழைய சொற்களைச் சொன்னாலும் புரியாது என்ற நிலையே ஏற்பட்டுவிட்டது.

தண்ணீரில் குதித்தால்தான் நீந்தக் கற்றுக்கொள்ள முடியும். சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம், எழுத எழுத, பயன்படுத்தப் பயன்படுத்தத் தமிழ் உரைநடை வளர்ச்சி பெற்று, தமிழரின் மேம்பாட்டுக்கான ஏணியாகும்.

01-08-1999

மே.து. ராசு குமார்