பக்கம்:உரைநடை வளர்ச்சி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
முன்னுரை



தமிழில் உரைநடை வளர்ச்சி என்ற பொருள்பற்றிப் பல நூல்களும் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன. ஆயினும் ஒரு புதிய கோணத்தில் இப்பொருளை ஆராயும் நோக்கத்தோடு மதுரை வாசகர், பேரவையினர் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு சொற்பொழிவு நிகழ்த்த வேண்டிக்கொண்டார்கள். அதில் பாரதி காலம் முடிய உரைநடையின் வளர்ச்சியை வரலாற்று வழியாகச் சுட்டிக் காட்டியிருந்தேன்.

அதற்காகத் தயாரிக்கப்பட்ட குறிப்புகள் கட்டுரையாக எழுதப்பட்டன. மிகப் பண்டைக் கால முதல் சமீப காலம் வரையுள்ள உரைநடையை அதன் பயன்பாடு கருதி ஆராய்ந்தேன். உள்ளடக்கத்துக்கேற்ற உருவமாக உரைநடை விளங்குவதை எடுத்துக்காட்டினேன். பண்டைய கல்வெட்டுக்கன், இலக்கிய உரைகள் ஆகியவற்றை இரு போக்குகளாகக் குறிப்பிட்டேன். இலக்கிய உரைகளின் இரு போக்குகளை விளக்கி, அவை இலக்கிய நடையாகப் புலமையுடையவர்களுக்கு மட்டும் விளங்கும் நடையாக உள்ளது என்பதை மேற்கோள்களோடு காட்டியுள்ளேன். கல்வெட்டு நடை, அவ்வக் காலத்துக்குரிய பேச்சு நடைக்கு மிக நெருங்கிய நடையாக உள்ளது. பொதுவாக வரலாற்று வழியாக உரைநடையின் வளர்ச்சி இந்நூலில் காட்டப்பட்டுள்ளது.

தற்கால உரைநடை பற்றி மூலக் கட்டுரைகள் எதுவும் நான் எழுதவில்லை. பாரதி காலத்தில் தமிழ் உரைநடை பல வாழ்க்கைத் துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வலிமையடைந்தது. பல துறைகளிலும் வன்மையாகச் செயல்படக்கூடிய நடையாக வளர்ச்சி பெற்றது. பாரதி தமிழ் நடையை, மக்களுக்குப் பயன்படும் மக்கள் நடையாக மாற்றினார்.

எனது ஆன்ம புத்திரன் டாக்டர் மே. து. ராசு குமாரின் இடைவிடாத தூண்டுதலால், இந்நூவின் பிற்பகுதியான பாரதி காலத்திலிருந்து தற்காலம் வரையுள்ள உரைநடை வளர்ச்சியை எழுதி முடித்தேன்.

பாரதி காலத்துக்குப் பின் பல்வேறு வகையாகத் தமிழ் நடை விரிவடைந்துள்ளது. அவை பற்றிச் சுருக்கமாகவே குறிப்பிட்டுள்ளேன்.