பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


அதற்கான கதைகளும், புராணக் குறிப்புகளும் நிறையக்கிடக்கின்றன.

எந்த ஆண்டில் இது தோன்றியது என்றால், கி.மு. 776 என்று சரித்திர ஆசிரியர்கள் எழுதுகின்றார்கள். இது எப்படி தோன்றியது என்று கேட்டால், கிரேக்க புராணங்கள் கூறும் கதைகளைத் தான் கூற வேண்டியிருக்கிறது.

புராணக் கதைகள்

1. ஒரு காலத்தில் சீயஸ் என்னும் தெய்வத்திற்கும், குரோனா எனும் தெய்வத்திற்கும் மல்யுத்தப் போட்டி ஒன்று, யாருக்கு பூமிசொந்தம் என்பதற்காக நடைபெற்றதாம். அந்தப் போட்டியில் சீயஸ் தெய்வம் ஜெயித்ததை நினைவு படுத்துவதற்காக, ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பது அக்கால கிரேக்கர்களின் நம்பிக்கையாகும்.

2. ஹிராகில்ஸ் என்ற தெய்வம் அகியஸ் என்ற அரசனை தோற்கடித்துப் பெற்ற வெற்றியைப் போற்றுவதற்காக, ஹிராகில்ஸால் ஒலிம்பிக் பந்தயம் தோற்றுவிக்கப்பட்டது. அதன் காலம் கி.மு. 1253 என்றும் கூறப்படுகிறது.

3. ஒனாமஸ் என்ற ஓர் அரசன், அவனுக்கு ஹிப்போடோமியா என்ற அழகான பெண், அவளை மணந்து கொள்ள விரும்புகிறான் பிலாப்ஸ் என்ற இளைஞன். அழகிய பெண்ணை அடைய விரும்புபவர்கள், பெண்ணின் தந்தையுடன் தேரோட்டப் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும். போட்டியில் வென்றால் கல்யாணம், தோற்றால் சிரச்சேதம். தந்திரமாக, பிலாப்ஸ் போட்டியில் வெல்கிறான். ஒனாமஸ் மன்னன் ஏற்பட்ட தேர் விபத்தில் இறந்து விடுகிறான். பிலாப்சுக்குப் ஹிப்போடோமியாவுக்கும் திருமணம் நடைபெறுகிறது.