பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா


கிரேக்கர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்ற கட்டாய விதி காற்றில் போட்ட பஞ்சாயிற்று. எல்லோரும் கலந்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டதால், வெற்றியே அடைய வேண்டும். எப்படியாவது! என்ற வெறியும் தோன்றியதால், பந்தயங்களில் ஊழல்கள் பெருகின. வியாபார முறைகள், வெற்றி பெறுவதற்காகக் கீழ்த்தரமான தந்திர முறைகள் எல்லாம் தலைவிரித்துப் பேயாட்டம் போடத் தொடங்கின.

பரிசுப் பொருட்கள் பணமாகவே வேண்டும், வெள்ளியாகவே வேண்டும் என்று போட்டியாளர்கள் போராட்டமே நடத்தினர். பந்தயங்கள் நடைபெறும் போது, கூச்சலும்குழப்பமும் அதிகமானதைக் கண்ட, அந்நாளைய சக்ரவர்த்தியான ரோம் நாட்டு சக்ரவர்த்தி முதலாம் தியாடோசியஸ் என்பவர், பந்தயங்களே வேண்டாம் என்பதாக முடிவெடுத்து, ப்நதயங்கள் இனி நடைபெறவே கூடாது என்று சட்டத்தின் மூலம் ஆணையிட்டார். சரித்திரப் புகழ் பெற்ற ஒலிம்பிக் பந்தயங்கள் சமாதிக் காடாயின.

சீயஸ் கோயிலானது நெருப்புக்கு இரையானது, ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு ஏற்பட்ட பூகம்பத்தில், ஒலிம்பியா பகுதி மண்ணோடு மண்ணாயிற்று அப்பகுதியைச் சுற்றி அழகுபடுத்தி வந்த ஆல்பியஸ் என்ற ஆறும் பொங்கிப் பாய்ந்து, அப்பகுதியை தரைமட்டமாக்கி விட்டது.

இவ்வாறு காட்சிக்குரிய பொருட்களும், கவின்மிகு ஒலிம்பிக் பந்தயச் சூழலும் கற்பனைக்குப் பாய்விரித்து விட்டு மறைந்து போயின.

ஒலிம்பிக் பந்தயங்களின் வீழ்ச்சி

1200 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்று, அமைதி காத்து, ஆற்றலை வளர்த்து வந்த அருமைமிகு ஒலிம்பிக்