பக்கம்:உலக நாடுகளில் உடற்கல்வி.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



உலக நாடுகளில் உடற்கல்வி

63



குட்டி தேவதைப் பெறுகின்ற மரியாதையையும் போற்றுதலையும் அவன் பெற்று, பெருங்குடி மகனாகப் போற்றப் பெற்று வாழ்ந்தான்.

புலவர்கள் அவனைப் புகழ்ந்து பாமாலை சூடி மகிழ்ந்தார்கள். சிற்பிகளோ அவனை சிலை வடித்துக் கெளரவித்து, நிலையான புகழை சமைத்தார்கள். அவன் எந்த ஒலிம்பிக் பந்தயத்தில் வெற்றி பெற்றானோ, அந்தப் பந்தயத்திற்கு அவன் பெயரையே சூட்டி மகிழ்ந்தார்கள்.

ஆக, ஒலிம்பிக் பந்தயங்களில் வெற்றி பெற்று, மாவீரனாகத் திகழ்வதையே உயர்ந்த கெளரவமாக ஒவ்வொரு கிரேக்கக் குடிமகனும் கருதினான். அதற்காக உயர்ந்த லட்சியத்தோடு உழைத்தான். ஒழுக்கத்தைக் காத்தான். தீயவைகளை நீத்தான். தெய்வப் புகழைப் பெற்றான்.

இத்தகைய எடுப்பு மிக்கப் பந்தயங்கள, வர வர கெளரவத்தை இழந்தன. அழிவுப் பாதையில் நடந்தன என்று பல காரணங்களை அறியும்போது, மிகவும் வேதனையாகவே இருக்கிறது.

ஒலிம்பிக் பந்தயங்களின் வீழ்ச்சி

கீர்த்தி மிக்கக் கிரேக்க இனம், வலிமையான உடலை, வளமான மனதைப் பெற்றிருந்தாலும், தங்களுக்குள்ளே போரிட்டு தாக்கிக் கொண்டதன் விளைவாக, ஒற்றுமை குலைந்ததன் காரணமாக, வலிமைமிக்க ரோமானியர்களிடம் வீழ்ச்சி அடைந்தனர்.

கிரேக்கம் ரோமானியரிடம் அடிமையானது. நாடே அவலம் அடைந்தபோது, ஒலிம்பிக் பந்தயங்களில் நிலை என்ன? ஒலிம்பிக் பந்தயங்களும் உரிய கண்ணியத்தையும், கெளரவத்தையும் இழந்தன.