பக்கம்:உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

உலக வரலாற்றில்


நாட்டை விட்டு எப்படியாவது வெளியேறி, அயல்நாடு சென்று அங்குள்ள இந்தியர்களைத் திரட்டி இராணுவப் பயிற்சி அளித்து, பிரிட்டிஷ் ஆட்சி மீது போர்ப் பிரகடனம் செய்யவேண்டும் என்று போஸ்திட்டமிட்டார்.

வழக்கமாக தன்னைச் சந்திக்க வரும் முஸ்லீம் மருத்துவரைப் போல வேடமிட்டு போஸ் தனது வீட்டை விட்டு வெளியேறி விட்டார். அவர் சென்றது யாருக்குமே தெரியாது. வீட்டிற்குள் அவர் இருப்பதாகவே ஆங்கில அரசு நினைத்துக் கொண்டிருந்தது. பிரிட்டிஷ் ஆட்சியினர் அவர் மீது தொடர்ந்த வழக்கு மீது விசாரணை வந்தது. போலீஸார் அவரை அழைத்து வர வீட்டிற்குள் சென்று பார்த்தபோது வெறும் அறைதான் இருந்தது தவிர போஸ் அங்கு இல்லை.

துப்பறியும் துறையினரும், காவலரும் பரபரப்பு அடைந்து நாடெங்கும் தேடிப்பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. ஆனால், அவர் அயல்நாடு சென்றார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை.

இமயமலைச்சாரலில் உள்ள கைபர் கணவாயைக் கடந்து ஆப்கானிஸ்தானத்திற்கு செல்லும் முயற்சியில் சுபாஷ் சந்திரபோஸ் ஈடுபட்டிருந்தார்.

கைபர் கணவாய் அருகே உள்ள மக்கள் புஷ்டு மொழி பேசுபவர்கள். அந்த மொழி அவருக்குத் தெரியாது. அதனால் அம்மொழி தெரிந்த பகத்ராம் என்ற ஒருவரை உடன் அழைத்து சென்றிருந்தார். இருவருமே எல்லைப் புற