பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

உள்ளம் குளிர்ந்தது

முத்தங்களை கொண்டு வந்து சேர்க்கின்றனவாம். நம்முடைய உள்ளத்தில் கூடத் துயர் அலை மோதும்போது நாம் கவலை அடைகிறோம். மணல் கரையாக நம் உள்ளம் இருப்பதுவே காரணம். அப்படியின்றி இறைவனுடைய திருக்கோயிலாக இருக்குமானால் உலக வாழ்க்கையில் வந்து வந்து மோதுகின்ற சுக துக்கமாகிற அலைகளிலிருந்து கிடைக்கின்ற அரிய முத்தங்களாகிய உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

சேவகன்

ங்கேயுள்ள எம்பெருமான் சேவகனாக, பெருவீரனாக இருக்கிறான். வீரம் உடையவனை அழகிய பெண்கள் நாடி வருவார்கள். வீரம் உடையவனைக் காதல் செய்ய விரும்புவது அழகிகளின் இயல்பு. இங்கே வீரத்தினால் சூரபன்மாவை அழித்த எம்பெருமான் வள்ளி நாயகனாக விளங்குகிறான். வீரரில் சிறந்த வீரனாகிய ஆண்டவன் பேரழகு உடையவன். அவனுக்குள்ள செல்வத்துக்குக் குறைவு இல்லை. அவனே அறிவிற் சிறந்த ஞான மூர்த்தியாக இருக்கிறான். ஆடவருக்கு வேண்டிய எல்லா நலங்களும் ஒருங்கே பொருந்திய அந்தப் பெருமானை மணவாளனாக் அடைய வேண்டுமென்றால் எத்தனையோ தவம் செய்திருக்க வேண்டும். வள்ளியம் பெருமாட்டி அந்தத் தவம் உடையவள். அவளுக்கு அவன் காதலனாக வாய்த்தான். பேரழகியாகிய வள்ளி பெருங் கருணையுடைய எம்பெருமானை அடைந்தது நமக்குத் தைரியம் ஊட்டுகின்ற செயல். வீரத்தினால் சிறப்புப் பெற்ற செந்தூர் ஆண்டவன், காதலுடைய வள்ளிக்கு மணவாளனாகி, மயில்மேல் ஏறி ஒளி வீச வருகிறான். மயிலேறிய மாணிக்கமாக விளங்குகிறான். அவனுடைய திருக்கோலம் அவனுடைய வெற்றிச் சிறப்பையையும் காதல் சிறப்பையும் பேரழகையும் காட்டுகிறது.