பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



பெரியவர்கள் திருவாக்கு

தினந்தோறும் பேசுகின்ற பேச்சே இப்படி இருக்க வேண்டுமென்று ஆன்றோர்கள் போதித்திருக்கிறார்கள். பல காலத்திற்கும் நிற்கின்ற சொற்களைச் சொல்லுகின்ற பெரியவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் பேசியவற்றைத்தான் இன்றைக்கு உபதேசமாகவும், நல்லுரையாகவும் கொள்கிறோம். ஞானசம்பந்தர் முதலிய பெருமக்கள் திருவாக்காக இன்று கிடைத்திருப்பன திருமுறைகள். பெரியவர்கள் பாடிய பாடல்களை அவர்களுடைய திருவாக்கு என்று சொல்கிறோம். திருவாசகம், திருவாய்மொழி என்ற நூற் பெயர்கள் திருவாக்கு என்ற பொருளையே உடையவை. மற்றப் பேச்சைவிட அவர்கள் பாடிய பாடல்கள் மிகச் சிறந்த அமைப்பை உடையனவாகும். பலகாலம் நிற்கும் தன்மை உடையனவாகவும், பல்லாயிரக்கணக்கான மக்களுக்குக் காலம் கடந்து, இடம் கடந்து பயன் தருவனவாகவும் இருக்கும்.

திருவாக்கின் பயன்

ந்தப் பயன் இன்னது என்று அநுபவித்தவர்கள் தாம் உணர்வார்கள். ஆனாலும் இதனால் இன்ன பயன் என்று தெரிந்து கொள்வதற்குச் சில குறிப்புகளை ஆசிரியர்களே அமைப்பார்கள். நூலுக்குப் பொதுப் பாயிரம் என்றும் சிறப்புப் பாயிரம் என்றும் இரண்டு வகை உண்டு. அவற்றில் சிறப்புப் பாயிரம் என்பது குறிப்பிட்ட நூலைப்பற்றிய செய்திகளைத் தருவது. அது சிறப்பான எட்டுக் கூறுகளைச் சொல்வது; சிறப்பில்லாத மூன்றையும் சொல்வது உண்டு என்று இலக்கண நூல்கள் கூறுகின்றன. ஆக்கியோன் பெயர், நூல் வந்த வழி, நூல் வழங்கும் எல்லை, நூலின் பெயர், நூல் அமைந்த யாப்பு, நூலில் உள்ள பொருள், நூலைக் கேட்கும் தகுதி