பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

உள்ளம் குளிர்ந்தது

நமக்குப் பயன்

ந்தர் அலங்காரம் பாடியதன் உண்மையான பயன் படிக்கின்ற நமக்குக் கிடைக்கும் நன்மைதான். வாயில்லாப் பூச்சிகளான மக்கள் இறைவனைத் தெரிந்து கொள்வதற்கும், தம்முடைய குறைகளைத் தெரிந்து கொள்வதற்கும் உரிய வல்லமை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குத் தங்கள் குறைகளை எம்பெருமானிடம் எடுத்துச் சொல்வதற்குரிய ஆற்றல் இல்லை. ஆகவே இறைவனுடைய பெருமையை உணர்த்தி, மக்களுடைய குறைகளையும் எடுத்துச் சொல்லி, அவனிடத்தில் எப்படி அணுகி விண்ணப்பம் செய்வது என்பதையும் காட்டவேண்டுமென்ற நோக்கத்தில் பெருங்கருணை வள்ளலாகிய அருணகிரிநாதப் பெருமான் இந்த நூலை இயற்றினார். தம்முடைய உள்ளத்தில் கந்தப்பிரானால் கிடைத்த இன்ப உணர்ச்சி பொங்கிவர, பரந்து நின்ற தம் அறிவு துணை செய்ய, இதைப் பாடினார் என்று சொல்லலாம். ஆனால் அதைவிட மக்களிடத்தில் உள்ள பெருங் கருணையினால் சொன்னார் என்பதே பொருத்தம். ஆகையால் இந்த நூலைப் பாடியதால் வரும் பயன் இன்னது என்பதைச் சொல்ல வந்தவர் முருகப்பெருமான் அடையும் புகழ் என்றோ நான் இறைவனுடைய அருள் அநுபவம் பெற்றது என்றோ சொல்லவில்லை. இதனைப் படிக்கின்றவர்கள் இன்ன பயனைப் பெறுவார்கள் என்றே சொல்கிறார்.

அருணகிரியார் கால நிலை

ருணகிரியார் வாழ்ந்த காலத்தில் தமிழ் நாட்டில் முடியுடை மூவேந்தர்கள் ஆட்சி இல்லை. அவருடைய காலமாகிய பதினைந்தாவது நூற்றாண்டில் எங்கே பார்த்தாலும் சிற்றரசர்கள் வாழ்ந்தார்கள். சின்னச் சின்னத் தலைவர்கள் மகாராஜா என்ற பட்டம் போட்டுக் கொண்டு தம் ஆணையைச்