பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பயன்

111

செலுத்தி வாழ்ந்தார்கள். செல்வத்தால் உண்டாகும் போகங்களை அநுபவித்து இந்திரியங்களின் பசியைத் தீர்க்கவேண்டுமென்று அவர்கள் எண்ணியிருந்தார்கள். புகழுக்கு ஆசைப்பட்டார்கள். அதுகாரணமாகப் புலவர்கள் அவர்களை நச்சிப் பாடி இன்புற்றார்கள். இறைவனைப் பாடாமல் மனிதனைப் பாடும் துறையில் ஈடுபட்டிருந்தார்கள். பார காவியங்களைப் பாடும் ஆற்றல் இல்லாமல் சின்னச்சின்னப் பிரபந்தங்களைப் பாடிக் கொண்டிருந்தார்கள். பணம் பெருத்த இடத்தில் திருவருள் இல்லா விட்டால் மற்றக் குறைபாடுகள் எல்லாம் தாமே வந்து சேரும். செல்வத்தைப் புலன் நுகர்ச்சியிலே செலவிடுவார்கள். ஆகவே, அரசர்கள் நிதி முறைகளை மறந்து தம்முடைய ஆணையைப் பெருக்கினார்கள். தம்முடைய குடும்பத்தினர் சுகமாக இருக்க விரும்பினார்கள். நீதியை மறந்து, ஒழுக்கத்தை மறந்து எத்தனையோ தவறுகளைச் செய்தார்கள்.

வேந்தரால் வரும் அச்சம்

குடிமக்களுக்குப் பிறரால் வருகின்ற அச்சத்தைப் போக்குவது அரசர் கடமை. தம்மாலும், தம்முடைய உறவினர்களாலும், அதிகாரிகளாலும், விலங்குகளாலும், திருடர்களாலும், பகைவர்களாலும் வரும் பயத்தைப் போக்கிச் சமாதானத்தை நிலைநிறுத்த வேண்டும். அப்படி இல்லாமல் கொடுங்கோல் மன்னர்கள் தம்மைக் கண்டு எல்லோரும் அஞ்சும்படி செய்வார்கள். அதுமட்டு மன்று. சிற்றரசர்கள் அங்கங்கே வாழ்ந்து கொண்டிருந்ததால் எப்போது பார்த்தாலும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஒருவரைக் கண்டால் மற்றொருவருக்குப் பொறாமை. ஒரு நாட்டில் நடைபெறும் சண்டையினால் அந்த நாட்டிலுள்ள மக்களுக்கும் துன்பம் உண்டாகும். போர் நிகழும் காலத்தில் மக்களுடைய வாழ்வில் பலவகையான அவலங்கள் உண்டாவதை நாம்