பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

132

உள்ளம் குளிர்ந்தது

பிறருக்கு அச்சத்தை உண்டாக்கும் எதுவும் முருகனுடைய அடியார்களுக்கு அச்சம் விளைவிக்க முடியாது என்பது இதன் கருத்து.

இந்தப் பாடலோடு கந்தர் அலங்காரம் நிறைவேறுகிறது; பயனுள்ள நூலாக நிறைவேறுகிறது. நன்றாகத் தழைத்து வளர்ந்த பழமரத்தின் உச்சியில் கனி கனிந்து இலங்குவதைப் போல இந்த அருள் நூலின் முடிவில் நம்முடைய அச்சத்தைப் போக்குவதாகிய பயனைத் தரும் இப்பாடல் அமைந்திருக்கிறது.

இப்படிச் சொல்வதற்கு அருணகிரியாருடைய உள்ளத்தில் எத்தனை உறுதிப்பாடு இருக்க வேண்டும்! முருகன் நிச்சயமாக அருள் செய்வான் என்ற துணிவில் எழுந்த பாடல் இது. நமக்கும் அந்தத் துணிவு வர வேண்டும். “துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வார்” என்பது திருமந்திரம்.