பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

உள்ளம் குளிர்ந்தது

எனக் கீழே வந்து படிந்து,அடியில் அகப்பட்டுக் கொண்ட மக்களை எல்லாம் நசுக்கி நாசம் செய்கின்ற கடுமையான செயலைக் கிரௌஞ்சாசுரன் செய்து வந்தான். அந்தச் சிலம்பை முருகப்பெருமான் திருக்கையில் உள்ள வடிவேல் பொடியாக்கிவிட்டது.

சூரபன்மன் அகங்கார மயமானவன். அவனுக்கு உறவாகிய கிரௌஞ்சாசுரன் மமகார மயமானவன்.மலை போல நின்று எல்லா வளங்களும் தன்னுடையன என்று செருக்கு அடைவது மக்களுடைய இயல்பு. சூரனும் "நான்" என்ற உணர்வோடு கிரௌஞ்சாசுரனைத் தனக்குக் கவசமாகக் கொண்டிருந்தான். இறைவன் முதலில் மமகாரத்தைப் போக்கிப் பின்பு அகங்காரத்தைப் போக்குவான்.

"எல்லரம் அற என்னை இழந்த நலம்"

என்று கந்தர் அநுபூதியில் வந்த பாட்டுக்கு, மமகாரம் அற்று, அகங்காரம் அற்ற நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். சூரபன்மாவை இறைவன் முதலில் அழிக்கவில்லை. அவனோடு தொடர்புடைய படைகளையும், பின்பு அவனுடைய தம்பிமார்களையும்,கிரௌஞ்சாசுரனையும் முன்னே அழித்துவிட்டு அப்பால் தனியாக நின்ற குரனை அழித்தான். கப்பும் கிளையுமாக இருக்கும் மரம் சாலையில் நிற்கும்போது அதை வெட்டவேண்டுமானால் முதலில் கிளைகளை வெட்டிவிட்டு அப்பால் மரத்தை வெட்டுவது வழக்கம். அதுபோல் படர்ந்திருக்கும் மமகாரத்தைப் போக்கி, அது கிளைத்தற்கு மூலமான அகங்காரத்தை இறைவன் போக்குவான். இதைத்தான் அந்தச் சங்காரமுறை காட்டுகிறது. முருகன் மமகாரத்தைப் போக்குவான் என்பதை உணர்த்துவதற்கு,

சிலம்பு ஊடுருவம் பொரு வடிவேலும்

என்று சொன்னார் அருணகிரியார்.