பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

உள்ளம் குளிர்ந்தது

இப்போது நாம் ஆண்டவனுடைய திருக்கரத்தையும், அது பற்றியிருக்கும் வேலையும் பார்த்தோம். ஆண்டவன் பெருவீரம் உடையவன். வேலாயுதம் அவனுடைய வீரத்தினால் சிறப்பு அடைகிறது.

"வீரவேல் தாரைவேல் விண்ணோர் கிறைமீட்ட
தீரவேல்"

என்று வேலைச் சொல்வது வழக்கம்.

என்ன இருந்தாலும் வேல் கருவிதான். அதனை உடையவனுக்கு வீரம் இருந்தாலன்றிப் படைக்கலம் வீரம் உடையது ஆகாது.

"வாளொடென் வன்கண்ண ரல்லார்க்கு"

என்பது குறள். படையை யார் விடுகிறார்களோ அவர்களுடைய வீரத்தைப் படையின்மேல் ஏற்றிச் சொல்வது வழக்கம். அதை இலக்கணை என்று சொல்வார்கள். அந்த வகையில் வேலை வீரவேல் என்று சொல்வர். முருகன் வீரர்களில் சிறந்த வீரன். அவனுடைய கைப்பட்டது எதுவும் பெருமை அடைகிறது. ஆயுதங்களில் சிறந்ததாகிய வேல் வீரர்களில் சிறந்தவனாகிய முருகன் திருக்கரத்தில் இருந்து மிக்க புகழை அடைந்தது.

கடம்பும் தடம்புயமும்

பொதுவாக வீரனைப் பற்றிச் சொல்லும்போது அவன் தோள் வலியை உடையவன் என்பார்கள். தோள், ஆண்மைக்கு இருப்பிடம்.

"நீடிய அரக்கர் சேனை நீறுபட் டழிய வாகை
சூடிய சிலையி ராமன் தோள்வலி கூறு வோர்க்கே"

என்று கம்பன் இராமனுடைய வீரத்தைப் புலப்படுத்துகிறான்.