பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உள்ளம் குளிர்ந்தது

21

புதைந்து அறியாமையைப் போக்கவும் மெய்ஞ்ஞானத்தை வளர்த்து என்றைக்கும் மாறாத பேரின்பத்தை அநுபவிக்கவும் உதவின. இறைவனே குருவாக எழுந்தருளி அருள் புரிந்தான். அருணகிரியார் இதனை அநுபவத்தில் கண்டவர் ஆதலின், நாமும் முருகப் பெருமானைத் தியானம் பண்ணும் வகையில் இந்தப் பாடலைச் சொன்னார்.

முன்பு சொன்னபடி,பாடலைப் படிப்பவர்கள் உறுப்பைச் சுட்டும் சொற்கள் வரும்போதெல்லாம் அந்த அந்த அங்கத்தை மனத்தில் நிறுத்தித் தியானம் பண்ண வேண்டும். திருவடியும், தண்டையும் என்று சொல்லும் போது நமக்கு அவை அகக்கண்ணில் வரவேண்டும். தண்டையின் ஒலியும், சிலம்பின் ஒலியும் காதில் கேட்க வேண்டும். இப்படி நிறுத்திப் பயின்றால் இந்தப் பாடல் நம் மனத்தை ஒருமுகப்படுத்தித் தியானம் செய்ய உதவும் என்பது உறுதி.

திருவடி யும்தண்டை யும்சிலம்
பும்சிலம்பு ஊடுருவப்
பொருவடி வேலும் கடம்பும்
தடம்புயம் ஆறிரண்டும்
மருவடி வான வதனங்கள்
ஆறும் மலர்க்கண்களும்
குருவடி வாய்வந்தென் உள்ளம்
குளிரக் குதிகொண்டவே.

(முருகப்பெருமானுடைய திருவடிகளும், அவற்றில் அணிந்த தண்டையும் சிலம்பும், கிரௌஞ்சமாகிய மலையை உள்ளே புகுந்து உருவும்படி போர் செய்த கூர்மையான வேலும், கடம்பமாலையும் விசாலமான தோள்கள் பன்னிரண்டும், மணத்தையுடைய வடிவ