பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

உள்ளம் குளிர்ந்தது

கண்ணும் ஒன்றுபட்டால் பேரின்பம் தானே வந்து அமையும். காதலனும் காதலியும் ஒருவரை ஒருவர் நோக்குவார்கள் என்றும், கண்வழி உள்ளே புகுவார்கள் என்றும் காவியங்கள் பாடுகின்றன.

"கண்ணொடு கண் இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்
 என்ன பயனும் இல"

என்பது திருக்குறள். கண்ணும் கண்ணும் பார்ப்பதில் மிக்க இன்பம் உண்டாகுமாம்.

இங்கே ஆண்டவனுடைய திருவிழிகளை நம்முடைய கண்கள் பார்க்கின்றன. அப்போது உண்டாகும் இன்பம் எல்லா இன்பங்களையும்விடப் பெரிதாக இருக்கும். முருகப் பெருமானுடைய கண்கள் தாமரை மலரைப் போல அமைகின்றன. அவற்றில் விரிவு உண்டு; ஒளி உண்டு.

குரு வடிவு

திருவடி முதல் மலர்க்கண்கள் வரையிலுள்ள உறுப்புக்களையுடைய திருக்கோலத்தோடு முருகனே குருவாக எழுந்தருளினான் என்று அருணகிரியார் கூறுகிறார். நாம் பற்றிக்கொள்வதற்கு ஆதாரமாகத் திருவடி தோன்றியது. பின்பு மெல்ல மெல்லத் தெளிவு பிறக்கும் வண்ணம் ஞான சக்தியாகிய வேல் தோன்றியது. அப்பால் நம்முடைய துன்பங்களை எல்லாம் போக்கிக்கொள்வதற்கு பெருமானுடைய வீரத்தை வெளிப்படுத்துகிற திருத்தோள்கள் தோன்றின. பிறகு நம்முடைய உள்ளம் அமைதி அடையத் திருமுகம் தோன்றியது, பின்பு திருவருள் அநுபவத்தை உண்டாக்கும் திருக்கண்கள் தோன்றின. இப்படிப் படிப்படியாக முருகப் பெருமானுடைய திருவுருவத் தோற்றம் ஆனந்த அநுபவத்தை உண்டாக்கியது. இவை எல்லாம் சேர்ந்து உள்ளத்தில்