பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இராப்பகல் அற்ற இடம்

27

பாடுகிறான். பின்பு கீழ் ஸ்தாயிலில் பாடுகிறான். அவன் எப்படிப் பாடினாலும் அந்தப் பாட்டுச் சுருதியோடு ஒட்டியிருக்கும். ஆரோகணம், அவரோகணம் ஆகிய இரண்டுக்கும் பொதுவாக ஓடிக்கொண்டிருப்பது சுருதி. ஞானிகளுடைய மனம் எப்போதும் சுருதி போடுவது போல இறைவனை நினைத்துக்கொண்டிருக்கும். அவர்கள் நம்மைப் போலவே பல காரியங்களைச் செய்தாலும் மனம் நடுநிலையிலிருந்து மாறுவது இல்லை. இறைவனுடைய நினைப்பு எல்லாக் காலத்திலும் சுருதி போட்டுக்கொண்டிருக்கும். அந்த நிலையைச் சமநிலை என்று சொல்வார்கள். அது வரவேண்டுமானால் எத்தனையோ காலம் சாதனம் செய்ய வேண்டும்.

"எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும்
முத்தர் மனமிருக்கும் மோனத்தே——மெத்தனமாய்க்
காதிவிளை யாடிஇரு கைவீசி வந்தாலும்
தாதிமனம் நீர்க்குடத்தே தான்"

என்று ஞானிகளுடைய மன நிலையைப்பற்றி ஒரு பாட்டு வருகிறது. கிராமங்களில் குளத்திற்கோ, ஆற்றுக்கோ சென்று தாய்மார்கள் நீர் எடுத்து வருவார்கள். தலையின் மேலே ஒரு குடமும், அதன்மேல் ஒரு தோண்டியும், அதன் மேல் ஒரு செம்பும், இடையில் ஒரு குடமும் வைத்துக் கொண்டு வருவதைப் பார்க்கலாம். இடுப்பிலே இல்லாவிட்டாலும் தலையில் ஒன்று இரண்டு வைத்துக்கொண்டு வருவார்கள். இம்படி நாலுபேர் சேர்ந்துவரும்போது சும்மா வர முடியுமா? ஊர் விவகாரங்களை எல்லாம் பேசிக் கொண்டு வருவார்கள்; கையை வீசிப் பேசுவார்கள். அப்படி அவர்கள் கையை வீசிக்கொண்டும், பேசிக் கொண்டும் வந்தாலும் தலையில் இருக்கும் குடத்தை மறந்து விட மாட்டார்கள். அது கீழேவிழும்படி தலையை அசைக்க மாட்டார்கள். அவர்களுடைய நடையிலே ஒரு நிதானம்