பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



கண்ணாரக் காணும் காட்சி

மக்காக அருணகிரிநாதர், "நான் தியானம் பண்ணும்படி உன் திருவடியைத் தரவேண்டும்" என்று பிரார்த்தித்த பாட்டைப் பார்த்தோம். மறுபடியும் அருணகிரியார் தாம் பெற்ற அநுபவத்தைச் சொல்ல வருகிறார். முதல் பாட்டில், இறைவன் கோலம் தம் உள்ளம் குளிரக் குதி கொண்ட அதிசயத்தைச் சொன்னார். அதற்கு மேற்பட்ட அநுபவம் ஒன்றை இப்போது சொல்லப்போகிறார்.

புறத்தோற்றமும் அகத்தோற்றமும்

நாம் கண்ட கண்ட பொருளைப் பாராமல் இறைவன் திருவுருவத்தைக் கண்ணால் நன்றாகக் காணவேண்டும். திருக்கோயிலுக்குச் செல்லும்போது இறைவனோடு தொடர்புள்ள பொருள்களைப் பார்க்கிறோம். புறத்தில் உள்ள தெய்வங்களைப் பார்த்துக் கொண்டு உள்ளே இருக்கும் மண்டபத்திற்குள் நுழைந்து, கடைசியில் இறைவன் திருமுன் நிற்கிறோம். அவனுடைய திருவுருவத்தைத் தீபாராதனை செய்யும்போது பார்க்கிறோம். அப்படிப் பார்க்கும்போது அந்த உருவம் நம்முடைய உள்ளத்தில் நிற்கும்படி பார்க்கவேண்டும். புறத்தில் காணும் போதே கண்ணை மூடிக்கொண்டு அந்த உருவத்தைஉள்ளே பதித்துக் கொள்ளப் பழக வேண்டும். இப்படி நாளடைவில் பழகப் பழகக் கண்ணை மூடிக் கொண்டால் அந்தத் திருவுருவம் உள்ளே தோன்றும் நிலை உண்டாகும்.

ஏதோ ஒருநாள் பார்த்துவிட்டு வந்த மாத்திரத்தில் நம் உள்ளத்தில் அந்த உருவம் நில்லாது. நம்முடன் மிகவும்