பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

உள்ளம் குளிர்த்தது

யாக இருக்க வேண்டுமென்று எண்ணினான். சீதையை நேரிலே கண்ட தன் தங்கையை அழைத்துக் காட்டவேண்டுமென்று நினைத்தான்.உடனே சூர்ப்பணகையை வரவழைத்தான். "இவள் தான் நீ சொன்ன சீதையா? பார்" என்று புற வெளியைக் காட்டினான். அங்கே இருந்தது வெறும் வெளிதான். ஆனால் அவனுடைய உள்ளத்தில் இருந்த முறுகிய காதலால் சீதையாகத் தோற்றியது. சூர்ப்பணகைக்கோ இராமன்மேல் நினைவு இருந்தது. அந்தப் பெருமானைக் கண்ணாரக் கண்டு அவனிடத்தில் முறுகிய ஆசையைக் கொண்டிருந்தாள். தன்னுடைய உள்ளத்தில் அவனுடைய உருவத்தை எப்போதும் எண்ணிக்கொண்டு அவன் அருள் கிட்டவில்லையே என்று வாடிக் கிடந்தாள். அவளை இராவணன் இப்படி அழைத்துக் கேட்டவுடன், அவள் தன் உள்ளத்திலுள்ள பாவத்தின் விளைவாக, "இவன்தான் அந்த வல்லில் இராமன்" என்றாள். வெறும் வெளியில் அவரவர்களுடைய மனோபாவத்திற்கு ஏற்றபடி உருவம் தோன்றியது என்று கம்பர் பாடுகிறார்.

அருணகிரியார் அநுபவம்

ருவெளித் தோற்றம் என்பது காண்பவருடைய பாவத்தினால் உணர்வதேயன்றி உண்மையானது அன்று. உள்ளத்தில் தோற்றுகிற தோற்றம் எதுவோ, அதுவே. ஆர்வம் முறுகியிருப்பதனால் புறவெளியிலும் தோற்றுகிறது. வெறும் காமத்திற்கே இப்படி உருவெளித் தோற்றம் தோன்றும் என்றால், உயிரோடு ஒட்டிய அன்புக்கு அத்தகைய தோற்றம் வருவது வியப்பு அன்று. உள்ளத்தில் எப்போதும் தியானம் பண்ணிக்கொண்டு இறைவனுடைய உருவத்தைக் காணும் இயல்புடைய பக்தர்களுக்குப் புறத்திலும் அந்தத் திருவுருவம் தோற்றும். இந்த அநுபவத்தைப் பெற்றவர் அருணகிரியார்.