பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

உள்ளம் குளிர்ந்தது

திருச்செங்கோட்டைச் சொல்லும்போது அங்கே நீர்வளமும், நிலவளமும் நிறைந்து நின்ற காட்சியையே சொல்கிறார். முன்பும் அப்படிச் சொல்லியிருக்கிறார். நீர்வளம் நிரம்பிய பொய்கையில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்கின்றன. முத்துக்கள் பிறக்கும் இடங்களில் தாமரையும் ஒன்று. கரும்பிலும், யானையின் தந்தத்திலும், சிப்பியிலும், மேகத்திலும் முத்துக்கள் தோன்றும் என்று சொல்வார்கள். முத்துவகைகளில் ஒன்று தாமரை மலரிலிருந்து தோன்றுவது. திருச்செங்கோட்டிலுள்ள பொய்கையில் தாமரையிலிருந்து முத்துக்கள் பிறக்கின்றனவாம்.

பதும மலர் கொங்கே தரளம் சொரியும் செங்கோடை.

கொங்கு - வாசனை. தரளம் - முத்து. தாமரை மலர்கள் வாசனையையும் முத்துக்களையும் சொரிகின்ற திருச்செங்கோடு என்கிறார். ஆண்டவனுக்கு முத்தையன், முத்துக் குமாரசுவாமி என்ற பெயர்கள் உண்டு. முத்துச் சொரியும் இடங்களில் எல்லாம் அவன் இருப்பான்.

"ஒருகோடி முத்தம் தெள்ளிக் கொழிக்கும்
கடற்செந்தில் மேவிய சேவகனே"

என்று பின்னே ஒரு பாட்டில் வருகிறது.

திருச்செந்தூரில் கடல் முத்துச் சொரிகிறது. திருச் செங்கோட்டிலோ பதும மலர் முத்தைச் சொரிகிறது.

கவிஞர் கற்பனை

"தாமரை மலர்களிலிருந்து முத்துக்கள் விழுவதாவது? அவற்றை அருணகிரியார் பார்த்தாரா?" என்ற கேள்வி தோன்றலாம். புலவர்கள் எதையேனும் சிறப்பிக்க வேண்டுமானால் அதைப் பெரிதாக்கிச் சொல்வது ஒரு சம்பிரதாயம். அருணகிரிநாதர் பெரும் புலவர்.