பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

77

எதனைத் தெரிந்து கொண்டாலும் தெரிந்து கொள்ளாவிட்டாலும் நம்முடைய முடிந்த முடிபாகிய லட்சியத்திற்கு அநுகூலமான வழியைத் தெரிந்து கொள்ளவேண்டும். ரெயில் வண்டியில் ஏற வந்தவன் ரெயில்வே ஸ்டேஷனில் கண்ட நண்பனோடு பேசிக் கொண்டே இருந்தால், வண்டி வந்து நிற்பது கூட மறந்துவிடும். வண்டி நிற்கிற வரைக்கும் அவனோடு பேசலாமே என்று ஆரம்பித்தவன் வண்டி புறப்பட்ட பிறகும் பேச்சுச் சுவாரசியத்தில் அதை மறந்து நிற்பான். இப்படித்தான் இந்த உலகத்தில் தோன்றிய மனிதன் இருக்கிறான். தன்னுடைய சரீரத்தைக் காப்பாற்றுவதற்குப் பலபேருடைய துணையை நாடுகிறான். இதனை வளர்ப்பதற்கும் சுகம் பெறுவதற்கும் பல செயல்களைச் செய்கிறான். நாளுக்கு நாள் பல பேருடைய தொடர்பும் ஏற்படுகின்றது. இந்தத்தொடர்பினால் நட்பும் பகையும் விளைகின்றன. நட்புக் காரணமாக மகிழ்ச்சியும், பகை காரணமாக அச்சமும் துன்பமும் அடைகிறான். "உலகத்தில் இருக்கும்போது ஏதாவது செயல் செய்யத்தானே வேண்டும்? மற்றவர்களோடு பழகத்தானே வேண்டும்?!" என்ற கேள்விகள் எழலாம். பழகுவது வேறு, பதிவது வேறு. பிள்ளைப்பூச்சி சேற்றிலே பல காலம் ஊர்ந்து கொண்டிருந்தாலும் சேறு ஒட்டாமலே வளைய வருகிறது. அதுபோல் நாம் எல்லாவற்றோடும் பழகிக் கொண்டிருந்தாலும் அவற்றோடு ஒட்டாமல் வாழப் பழகவேண்டும். நம்முடைய லட்சியம் இன்னதென்று தெரிந்து வாழவேண்டும்.

பற்றின்றி வாழ்தல்

முதாயத்திற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொண்டு அவ்வப்போது நமக்குத் துணையாகின்றவர்களோடு அன்பு செய்து வாழ்வது தவறு அன்று. ஆனால் அப்படி வாழ்கின்ற இடத்திலும், பழகுகின்ற மனிதர்-