பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருதலைக் கொள்ளி எறும்பு

வாழ்க்கைச் சித்திரம்

சில பத்திரிகைகளில் குழந்தைகளுக்காகச் சில சித்திரங்கள் வரும். சுற்றிச் சுற்றி வருகின்ற சில கோடுகளைப் போட்டு, உள்ளே இருக்கும் ஒருவன் கோட்டையைத் தாண்டி வெளி வருவதற்கு வழி கண்டு பிடியுங்கள் என்று போடுவார்கள். ஐந்தாறு வழிகள் வெளியே வருவதற்கு இருப்பது போலத் தோன்றும். ஆனால் ஒரு வழியைத் தவிர மற்றவையெல்லாம் எங்கேயாவது ஓரிடத்தில் போய் நின்று விடும்படி அமைந்திருக்கும். சரியான வழி, பலவிடங் களில் சுற்றிச் சுற்றிப் போய்க் கடைசியில் வெளியில் வரும்படி அமைந்திருக்கும். அத்தகைய சித்திரத்தைப் பத்திரிகைகளில் பார்த்திருக்கிறோம்.

மனிதன் வாழ்நாள் ஒரு வகையில் அந்தச் சித்திரத்தைப் போன்றதுதான். அந்தச் சித்திரத்திலே வெளியில் வருவதற்கு ஒரு வழியாவது இருக்கும். ஆனால் நம் வாழ்க்கைச் சித்திரத்தில், வெளியில் வர வழியே இல்லை. வெளியில் வரவேண்டுமென்ற ஆசை உடையவனுக்குக்கூட வழி தெரியாமல் சுழன்று சுழன்று வரும்படியாக அமைந்திருக்கிறது இந்தச் சித்திரம். அதற்குக் காரணம் நம் மனந்தான். போன போன இடங்களில் எல்லாம் பதிந்து கொண்டு எந்த இடத்தில் இருந்தும் மீள ஒட்டாமல் மனம் பற்றை வளர்த்துக் கொள்கிறது.

நட்பும் பகையும்

நாம் வாழ்கின்ற காலம் மிகக் குறைவு. அந்த காலத்திற்குள் நாம் தெரிந்து கொள்ளும் செய்திகள் பல.