பக்கம்:உள்ளம் குளிர்ந்தது.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

உள்ளம் குளிர்ந்தது



மணிவாசகர் வாக்கு

ந்த உவமையையே மணிவாசகப்பெருமான் ஆளுகிறார். இறைவனைப் பிரிந்து பிரபஞ்சம் என்னும் சேற்றுக்குள் சுழன்று எந்தப் பக்கமும் போய் விடுதலையைப் பெற முடியாமல் நிற்கிறோம். அதற்கு இருதலைக் கொள்ளியின் உள்ளே உள்ள எறும்பை உவமிக்கிறார். "எம்பெருமானே, இருதலைக் கொள்ளியின் உள்ளே இருக்கும் எறும்பு போல, உன்னைப் பிரிந்து எந்தப் பக்கமும் செல்ல முடியாதபடி நான் துன்புறுகின்றேன். என்னை இப்படி விட்டுவிட்டிருக்கலாமா?" என்று அலறுகிறார்.


"இருதலைக் கொள்ளியின் உள்ளெறும் பொத்து நினைப்பிரிந்த
விரிதலை யேனை விடுதிகண்டாய்; வியன் மூவுலகுக்கு
ஒருதலை வா,மன்னும உத்தர கோசமங் கைக்கு அரசே,
பொருது அலை மூவிலை வேல்வலன் ஏந்திப் பொலிபவனே."

அருணகிரியார் பாடல்

வற்றை எல்லாம் இப்போது நாம் மனத்தில் பதித்துக் கொண்டால் அருணகிரி நாதப் பெருமான் சொல்கிற ஒரு பாட்டுக்கு விளக்கம் பெற உதவியாக இருக்கும். அவரும் இருதலைக் கொள்ளி எறும்பைச் சொல்கிறார். ஆனால் அந்த இரு தலையும் இன்னவை என்று சுட்டிக் காட்டவில்லை. 'இருதலைக் கொள்ளியின் நடுவிலுள்ள எறும்பு போல நான் குலைந்து கொண்டிருக்கிறேன்; அதனால் எனக்கு உண்டான துயரம் வளர்ந்து வருகிறது. அதனை ஒழிக்க வேண்டும்' என்று முருகனிடத்தில் பிரார்த்திக்கிறார்.

கொள்ளித் தலையில் எறும்பது போலக் குலையும் என்றன்
உள்ளத் துயரை ஒழித்து அருள்வாய், ஒருகோடி முத்தம்
தெள்ளிக் கொழிக்கும் கடல் செந்தில் மேவிய சேவகனே!