பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் பிற்பகுதி

99

கழித்து, எவ்வூரினின்றும் பிறர் அறியாமல் அறியாமையும் வறுமையும் பின் தொடரப் புக்கர் சில்லாண்டு முன்னாற் சென்றாரோ, அவ்வூரின் குடிகளெல்லாம் ஒன்றுகூடி அவருக்கு இப்பொழுது பொது வரவேற்புக் கொடுப்பதென்றால், அவரது உள்ளங்கனியாமல் இருக்குமா? அங்ஙனம் வரவேற்று நின்றோருட் புக்கரை முன்னாளில் அடிமையாக ஆண்டவரும் இருந்தனர் எனின், புக்கரது வாழ்க்கை மாண்பு என்னே! என்னே! பிறகு, அவ்விதமாகவே புக்கர் அட்லாண்டாவிலும், நியூ ஆர்லியன்ஸிலும் (New Orleans) வரவேற்கப் பட்டுச் சிறப்பிக்கப்பட்டார்.

1896 ஜூன் 24-ஆம் தேதி ஹார்வர்டு (Harvard) பல்கலைக் கழகத்தார் எம். ஏ. பட்டத்தைப் புக்கருக்கு அளித்தார்கள். அப்பட்டம் அவர் செய்துவருந் தொண்டினைப் போற்றிக் கொடுக்கப்பட்ட கௌரவப் பட்டமாகும். நீகிரோவருள் முதன்முதலாக அக்கௌரவப் பட்டம் பெற்றவர் அவரே. ஆனால், அவர் நீகிரோ என்பதற்காகவோ அடிமையாகப் பிறந்தவர் என்பதற்காகவோ பாராட்டப்பட்டுப் பட்டம் புனையப் பெற்றாரல்லர். அவர் தென்றிசை மக்கள் முன்னேறுதற்கு வேண்டிய வகையில் தொண்டாற்றித் தமது சிறந்த அறிவையும் வண்மையையுங் காட்டியுள்ளார் ஆதலாலே அப்பட்டம் அவருக்குக் கொடுக்கப்பட்டது.