பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வாழ்க்கையின் பிற்பகுதி

103

மாணவர் டஸ்கிகீயிலிருந்து இருபது ஆண்டிற்குள்ளே வெளி வந்து, ஆங்காங்கெல்லாம் மக்களின் பொருள், கல்வி, ஒழுக்கம், மதம் முதலானவற்றை எங்ஙனம் மேலோங்கச் செய்வது என வழி காட்டியுள்ளார்கள். அவர்கள் செல்லுமிடமெல்லாம் ஒற்றுமை உணர்ச்சியை எழுப்புகின்றார்கள், நிலம் வாங்கும் முறையிலும், குடியை உயர்த்தும் முறையிலும், பணம் சேமிக்கும் முறையிலும், கல்வி கற்பிக்கும் முறையிலும், ஒழுக்கம் ஓதுவிக்கும் முறையிலும் அவர்களாற் பற்பல நற்பயன் விளைந்துள.

இவற்றிற்கெல்லாம் காரணராய் இருந்து குணக்குன்றாய்த் திகழ்ந்த புக்கர் வாஷிங்குடன், ரிச்சுமாண்டு என்ற ஊரில் முன்னர்க் கங்குல் பல ஒரு தளத்தின் அடியே கழித்தார் என்று முன்னரே கண்டனமன்றோ? அவ்வூரில்தானே, அவ்வூர்க் குடிமக்கள் 1900-ஆம் ஆண்டில் அவரை அழைத்துப் பிரசங்கம் ஒன்று புரியுமாறு வேண்டிப் பல விதமாகச் சிறப்புச் செய்தனர்.

"இன்னாமை யின்ப மெனக்கொளின் ஆகுந்தன்
ஒன்னார் விழையுஞ் சிறப்பு.”

என்பது உண்மையாயிற்று.

இப்பெருந்தகையாளர் டஸ்கிகீயில் 1915-ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், 14-ஆம் தேதி வானுலகு ஏகினார்.