பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

104

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

பிறந்த சாதி, குடி சமயம் ஆயவற்றால் உள்ள வேற்றுமைகளை நோக்காது, ஒழுக்கம், தாளாண்மை, வேளாண்மை ஆகியவற்றையே உலகம் நோக்கி மதிக்கும் என்பது புக்கர் வரலாற்றால் அறியப்படுகின்றது, தமது நாட்டில் உள்ள மக்களுடைய பொருள், கல்வி, ஒழுக்கம் இவற்றிற்குத் தம்மால் ஆனதைச் சேர்த்து உதவுகின்றவர் எல்லாம் நாளடைவிற் போற்றப்படுவார் என்பதும் அறியப்படும்.

”இன்பம் விழையான் வினவிழைவான் தன்கேளிர்

துன்பக் துடைத்துான்றுக் தூண்.”

என்பதை உன்னுக. டஸ்கிகீக் கலாசாலையிற் புக்கரை நினைந்து வரும் அறிகுறியாக ஓர் உருவச்சிலை வைக்கப் பட்டிருக்கின்றது. அதன்கண் கீழ் வருமாறு பொறிக்கப்பட்டுள்ளது :

”புக்கர் தி. வாஷிங்குடன்
1858–1915
அவர் தமது சமூகத்தின்
அறியாமையாகிய முகமூடியை அகற்றிக்
கல்வியாலுங் கைத்தொழிலாலும்
முன்னேற்றத்திற்கு உரிய
வழியைக் காட்டி
அழகுபடுத்தினர்.”

”அருமை யுடைத்தென்று அசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.”

என்பது பொய்யாமொழி அன்றோ?”