பக்கம்:உழைப்பால் உயர்ந்த ஒருவர்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

உழைப்பால் உயர்ந்த ஒருவர்

கூட்டத்திற் பேசுமாறு அழைத்தார்கள். அக்கூட்டம் பாஸ்டனில் நடந்தது: ராபர்ட்டு கௌல்டு ஷா (Robert Gould Shaw) என்ற பெரியார் ஒருவர் தமது நாட்டிற்காகப் போரில் உயிரை விட்டதைப் போற்றி நினைப்பதன் அறிகுறியாகத் தூண் ஒன்று நாட்டப்பட்டது. அவ்வேளையிற் பேசவேண்டுமென்றே புக்கர் அழைக்கப்பட்டிருந்தார். கவர்னர் வொல்காட்டு (Volcott) என்பாரே தலைமை தாங்கிப் புக்கரது பிரசங்கத்தைப் பாராட்டினார். அதனைக் கேட்ட மக்கள்தம் மெய்ப்பாட்டை ஏட்டில் எழுத ஒண்ணாது. புக்கரது பிரசங்க வன்மையின் அறிகுறி அஃதென்று சொல்லி அமைதலே அழகு.

பின்னரும், ஸ்பேனியர் அமெரிக்கப் போர் முடிந்த பின் நடந்த சமாதானக் கெண்டாட்டங்களுள் ஒன்றில், சிக்காகோ என்ற நகரிற் பேசுமாறு புக்கர் அழைக்கப்பட்டார். அம்மாநாட்டில் அவர் பிரசங்கத்தைக் கேட்ட மக்கள் முப்பதினாயிரவர் இருப்பார். ஐக்கிய மாகாணத்தலைவர் வில்லியம் மெக்கின்லி (Mr. William McKinley) என்பார் தம் அமைச்சரோடு அங்கு வந்திருந்தார். பிற தேசத்து அமைச்சருட்சிலரும் கப்பற்படைப் பணியாளர் பலரும் அங்கு வந்திருந்தனர். அங்கும் புக்கர் செய்த பிரசங்கம் போற்றப்பட்டது. அவர் சொற்பொழிவாற்றி வீடு திரும்பிய பிறகு, மறு-