பக்கம்:உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உழைப்பாளி தொழிலாளி பாட்டாளி ♦ 71



என்றார்; நான்தான், 'ஆதரவு தந்தாக வேண்டும்' என்று கூறினேன்; அப்போதே கூட, எனக்கும்-பெரியாருக்கும் கருத்து வேறுபாடு!

இப்படி, கம்யூனிஸ்டுகள் முன்னின்று நடத்தினர் தொழிலாளர்கள் உறுதியுடன் நின்றனர்-நாம் துணை நின்றோம்; என்றாலும் அந்த வேலை நிறுத்தம் முறியடிக்கப் பட்டது எதனால்? எப்படி?

"நடுத்தர அவர்களுக்கு வகுப்பாரின் ஆதரவு அந்தப் போராட்டத்திற்கு அப்போது கிடைக்கவில்லை; அறிவை அள்ளித் தரும் பத்திரிகைகள், 'இந்த வேலை நிறுத்தம் கூடாது தேவையற்றது நியாயமற்றது-மக்களுக்குத் தொல்லை தருவது - பிரயாணிகளுக்கு இடைஞ்சல் செய்வது - தொழிலாளர்களின் வீண் ஆர்ப்பாட்டம்" என்று எழுதின.

இதை நான் அப்போதே நண்பர் ஜீவானந்தத்திடம் கூறினேன்; அவர், 'அண்ணாதுரை - நீ ஒரு அவசரக்காரன்' என்று கூறிவிட்டார்!

அன்று நடுத்தர மக்களையே, 'வேண்டாம்; அவர்களின் ஆதரவே தேவை இல்லை' என்று பேசியவர்கள், இன்று 'பிர்லாவே வருக; கேரளத்தில் தொழிற்சாலைகளை அமைத்துத் தருக' என்று பேசுகிறார்கள்.

அன்று, 'நெடுஞ்செழியனைச் சேர்த்துக் கொள்ளுங்கள்' என்றேன்; 'கூடாது; இவர்களெல்லாம் மத்திய தர வகுப்பினர்; இவர்களைச் சேர்த்துக் கொண்டால், தொழிலாளர் இயக்கத்தின் தூய்மை கெட்டுவிடும் என்று பேசினார்கள். இன்று பிர்லாவையே அழைக்கிறார்கள்!

காரணம் கேட்டால், 'தொழிற்சாலையை நிர்வகிப்பது எப்படி என்பதைக் கற்றுத் தருவதற்காகவே அழைக்கிறோம் என்கிறார்கள்!