பக்கம்:ஊன்றுகோல், இளம்பெருவழுதி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏக்கம் தீர்க்க எழுந்த நூல்

XV


கரும்பார் குழலியின் குரலாக முடியரசனார் தரும் இப்பாடல், பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் 'நூறாசிரியம்’ பாடல்களோடு ஒப்பிட்டு மகிழத்துாண்டுகிறது.

போர்க்களக் காட்சியைப் பாவலர் விவரிக்கும் இந்நூலின் காட்சிகள், போர்வீரருள் ஒருவராய் நாமும் நிற்கும் உணர்வை ஊட்டுகின்றன:

'பண்ணோடு பணியாடப்
படர்வானில் கொடியாடப்
பரியோடு வந்து பொருதேர்'

எனத் தேர்ப்படைக் காட்சி நம்கண்முன் விரிகிறது.

நெட்டுமதில் முற்றுகையில்
   நின்றபகை கண்டவர்கள்
     நெஞ்சம் அழிவார்

கட்டுமரம் இட்டகத
   வைக்கடிதில் மூடியொரு
      காதம் அகல்வார்.

எனும் யானைப்படைக் காட்சி நமக்கே அச்சமூட்டுகிறது.

"முறுகுசி னத்துடன் அடிகள்பெ யர்த்தொரு
முனைமுகம் முற்றிலுமே
உறைகுரு திக்கறை படியம தர்த்தெழும்
ஒலியெழு போர்க்களமே”

எனக் குதிரைப் படைக் காட்சி அவற்றின் ஓட்டத்தோடு நம்மையும் ஒடவைக்கிறது.

'வீரர் நெஞ்சில் வேல்கள் பாய
மேவும் புண்ணின் வேதனை
நேரும் புண்ணில் மெல்ல மெல்ல
நெய்கள் பூசி ஆற்றுவார்’

எனும் காலாட்படைக்காட்சியில் வீரர் நடக்கும் ஓசை நம் காதில் கேட்கும்.