பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 ஊருக்குள் ஒரு புரட்சி "போலீஸ்காரங்க போடல கோனாரே... ஆண்டிக்கு விலங்கு போட்டது நாமதான்... நம்மளால ஒண்ணும் பண்ண முடியாதுன்னு நினைச்சி தான்... அவரு கையில விலங்கு போட்டிருக்கானுவ... நாம வாயில.. நாமளே விலங்க போட்டிருக்கது வரைக்கும். இப்படி பல அநியாயம் நடக்கும் சாமி..." "வா... இந்த சின்னானப் பாத்து ரெண்டுல ஒண்ன கேப்போம்..." மீனாட்சி, எழுந்திருக்கப் பார்த்தாள். காலை மடக்கிப் பார்த்தாள். கைகளை ஊன்றிப் பார்த்தாள். தலையை அழுத்தித் தாவப் பார்த்தாள். உருண்டு உருண்டு. சுருண்டு சுருண்டு, வெளியே போகப்பார்த்தாள். பேசிக் கொண்டு போனவர்களை, அங்கிருந்தபடியே குரல் கொடுத்து... "இங்க வாங்க... என் அண்ணாச்சிய என்ன பண்ணுனானுவ... சொல்லுங்க. சொல்லுங்க...' என்று சொல்லப் பார்த்தாள். கண்களைக் கழட்டி, அண்ணாச்சி இருக்கும் இடத்தைப் பார்த்துவிட்டு வருவதற்கு அனுப்பப் போகிறவள்போல், விழிதெறிக்கப் பார்த்தாள். அவன் விலங்கை உடைக்கப் போகிறவள் போல், கைகளை தரையில் அடித்தாள். அவனை உதைத்தவர்களை உதைக்கப் போகிறவள் போல், கால்களை வெட்டினாள். கழுத்தை ஆட்டினாள். உடம்பு அவள் நினைத்தபடி கேட்கவில்லை. அந்த உடம்பைத் தண்டிப்பவள் போல, கைகளை எடுத்துத் தலையில் அடித்தாள். தலைமுடியைப் பிய்த்தாள். முன் நெற்றியில் அடித்தாள். தலையைத் தூக்கித் தூக்கித் தரையில் மோதினாள். கையைத் தூக்கித் தூக்கி, முகத்தில் அடித்தாள். அடித்த கையை மீண்டும் தூக்கி, மார்பில் அறைந்தாள். மாறி மாறி அறைந்தாள். தலை பொறுத்துக் கொண்டது. முகம் சகித்துக் கொண்டது. முன் நெற்றி விட்டுக் கொடுத்தது. ஆனால் மார்புப் புண்... மார்பகத்தில் தோன்றியிருந்த அந்த எமககட்டிகள்... அவை விட்டுக் கொடுக்கத் தயாராகவில்லை. அவைகளுக்கும். விடுதலை வேண்டும்போல் தோன்றியிருக்க வேண்டும். எத்தனை நாளைக்கு, இந்த ஏழைப் பிராணியிடம் தங்கியிருப்பது... எத்தனை நாளைக்கு, மருந்து, மாயம் செய்யாமல், தங்களை சீந்தாமல் இருக்கும் இந்த வீட்டில் இருப்பது... தங்களின் முக்கியத்துவத்தை அறியாத அந்த வீட்டில், தங்கள் முக்கியத்துவத்தைக் காட்ட விரும்பின. அவைகளுக்கு ரோஷம் ஏற்பட்டு விட்டது. ஆவேசமான ரோஷம். அவளை. தங்களுடன் அப்படியே தூக்கிக்கொண்டு போக நினைத்த துவேஷமான ஆவேசம். உச்சி இரவு, அவளுக்கு உச்சகட்டமான நரகம். நெஞ்சு பிளப்பதுபோல மீனாட்சி, துடித்தாள். எமக் குத்தின் இறுதிநிலையில் தவித்தாள். காத்தாயியைக் காணுமே என்று தவித்தாள். அண்ணனுக்குப் பதிலாக, அந்த அக்காளைப் பார்த்துவிட்டாவது கண் முடலாம் என்பதுபோல், கண்களை உயிர்ப்புடன் வைத்திருந்தாள்.