பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 1 07 கல்லில் வைத்து இடித்து, அவள் காதில் வைத்து ஊதினார்கள். சின்னத்துரைக்கு, சோடா வாங்கிக் கொண்டு வந்தவன், அதை உடைத்து, அவள் முகத்தில் தெளித்தான். நயினார் மனைவி நடப்பது தெரியாமல் புலம்பிக் கொண்டும், அவளின் சின்னப் பையன்கள், ”அய்யா... அக்கா" என்று ஏங்கி ஏங்கி அழுது கொண்டும் இருந்தபோது, சேரிப் பையன் மூக்கையாவின் மனைவி, தலையிலும், முகத்திலும் அடித்துக்கொண்டே ஓடி வந்தாள். ஒரு மின்சாரக் கம்பத்தில், அவள் தலையை வைத்து மோதப்போனபோது, இரண்டு சேரிப்பெண்கள் அவளைப் பிடித்துக் கொண்டார்கள். மூக்கையாவின் வயதான தாய் தந்தையரை, நான்கு பேர் கைத்தாங்கலாகக் கூட்டி வந்தார்கள். சொல்ல முடியாத கூட்டம். சொல் தொடுக்க முடியாத நடுக்கம்... பிணத்திற்கருகே வந்ததும், சிறிது நேரம் அப்படியே ஸ்தம்பித்து நின்ற மூக்கையாவின் மனைவி, பிறகு அவன் தலையோடு தன் தலையைச் சேர்த்து உருட்டிக் கொண்டே, "என் மவராசா... ஒரு ரூபா கொடுத்துட்டுப் போறியே... ஒனக்குல்லாம் எதுக்குப் பொண்டாட்டின்னு' பாவிமொட்ட கேட்டேனே... கேட்டேனே... ஒன்கிட்ட கடைசியா. நல்ல வார்த்த சொல்லி வழியனுப்பாம. வைது தொலைச்சேனே... கடைசில... பொண்டாட்டி நிக்கேன்.... புருஷன் நீ போயிட்டியே... என் ராசா... என்னை நொந்துக்கிட்டே போனியா... இல்லன்னு ஒரு வார்த்த சொல்லு ராசா... என் மவராசா... என் மாணிக்கமே... நான் கடைசி வரைக்கும் மஞ்சள் கயிறோட இருப்பேன்னு, நினைச்சேனே மவராசா... ஒனக்கு... தங்கத்துல செயினு பண்ணிப் போடறேன்னு சொல்லிட்டு இப்ப இந்த மஞ்சக் கயித்தயும் பறிச்சிட்டியே... என் மவராசா..." என்று சொல்லிச் சொல்லிக் கதறினாள். ஒரளவு சுயநினைவுக்கு வந்த நயினாரின் மனைவி, மூக்கையாவின் மனைவியின் கழுத்தைக் கட்டிப் பிடித்துக் கொண்டே "நானாவது... வாழ்ந்து முடிஞ்சவா...நீ அறியாத வயசில... வாழ்ற பிள்ள... வாரிக் கொடுத்திட்டியே... வாரிக் கொடுத்திட்டியேடி..." என்று சொல்லிக் கொண்டே அழுதபோது, ஊர் ஜனங்கள் மொத்தமாக அழுதார்கள். ஒரு சிலர் ஆகவேண்டிய காரியங்களுக்காக, தங்களைத் திடப்படுத்திக் கொண்டே, கூட்டத்தை அதட்டினார்கள். "சரி... இனும... அழுது என்ன பிரயோஜனம்... அவங்க விதி முடிஞ்சி போச்சு..." "விதி யார விட்டுது... வீட்ல இருந்திருந்தாலும், சாவு வேற வகையில வந்திருக்கும். அன்னைக்கே தலையில... எழுதினத... அடிச்சி எழுத முடியுமா.. அவங்க முன்னால போறாங்க... நாம பின்னால போவப் போறோம். அவ்வளவுதான்." "சரி... பிணத்த இறக்குங்கப்பா... சின்னத்துரை சின்னய்யா திடமான ஆளு... எப்படியோ... பிணத்த கொண்டுவந்துட்டாரு... வேற