பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சு. சமுத்திரம் 129 அழுகைக் குரல், மரங்களிலும் மண்சுவர்களிலும் இருந்த பறவைகளை சிலிர்க்க வைத்தது. டி கடைகளில், வழக்கமான வாடிக்கைச் சிரிப்பு இல்லை. ஒவ்வொருவர் முகத்திலும், எள் விதைத்தது போன்ற விரக்தி. அவன் சோகத்திற்கும். மீனாட்சியின் மரணத்திற்கும் தாங்களே காரணம் என்பது போன்ற ஒருவித குற்றவுணர்வு. ஒரு வயோதிகரால் தாளமுடியவில்லை. ஆண்டியின் கைகளைப் பிடித்துக் கொண்டே "பாவிப் பயலே... ஒரு அற்ப மாட்டுக்காவ... ஆசத் தங்கச்சியை பறிகொடுத்திட்டியடா..." என்றார். "அற்ப மாட்டால இல்ல மாமா... அற்பப் பயலுவளால அவள் அற்பாயுசுல போயிட்டாள்... இனும... எதுக்காவ மறச்சிப் பேசணும்... " என்றார், அவனை எதிர்நோக்கி வந்த இடும்பன். ஆண்டிக்கு, ஊரின் புதிய போக்கு தோன்றவில்லை. தனக்குப் பின்னால் தோன்றி, முன்னால் போய்விட்ட தங்கையை நினைத்துக் கொண்டே, அவன் ஓடினான். மீனாட்சி, வீட்டு வாசலுக்குமேல், ஆகாயத்தில் நின்று கொண்டு, அவனை "அண்ணாச்சி... அண்ணாச்சி" என்று சொல்வது போன்ற பிரமை. தான் காண்பதும், கேட்பதும் கனவு என்பது போலவும், இப்போது அந்தக் கனவு முடியப் போகிறது என்பது போலவும், அருமை உடன்பிறப்பு அருகாமையில் பாயில் படுத்துத் தூங்குவது போன்றும் ஒரு பாசாங்கு எண்ணம். நடந்ததை நிராகரிப்பவன்போல அவன் வீட்டு முகப்புக்குள், கண்கொள்ளாக் கூட்டத்தினுள்ளே ஊடுருவிப் போனபோது... மீனாட்சி குளிப்பாட்டப்பட்டு, புதுச்சேலை கட்டப்பட்டு, நெற்றியில் திலகமிடப்பட்டு, வெளித் திண்ணையில் ஒரு மூலையில் சாத்தி வைக்கப்பட்டிருந்தாள். சுற்றிலும் பெண்கள் கூட்டம். மாரடித்து அழும் பெண்கள். தலையில் அடித்துக் கொள்ளும் தாய்மார்கள். "கட்டையில போற பயலுவளாலு. நீ கட்டையாய் போயிட்டியே என் மொவளே" என்ற ஒப்பாரி. "அநியாயக்காரப் பாவியளால... நீ அநியாயமாய் போயிட்டியே" என்ற தாய்மார்களின் கேவல்கள். தங்கம்மா, சத்தம் போடத் திராணி இல்லாமல், அண்ணியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா, ஆண்டியப் பனைப் பார்த்ததும், அவன் தன்னை வெளியே போகச் சொல்லுவான் என்று நினைத்தவள் போல், வெளியேறிக் கொண்டிருந்தாள். அழுதுவிட்டு ஒய்ந்திருந்த காத்தாயி, ஆண்டியைப் பார்த்ததும், அழுது புரண்டாள்: "நான் பாவிய்யா. பாவி... மேளத்துக்குப்போன என் புருஷனை சாராயம் குடிச்சிட்டு போலீஸ் பிடிச்சிக்கிட்டுப் போனதா... இந்த மாசானம் நொறுங்குவான் சொன்னான். நான் அறிவுகெட்ட ஜடம்... புத்திகெட்ட பொம்புளை, புருஷனத் தேடி போலீஸ் ஸ்டேஷன். ஸ்டேஷனாய் தேடி - o