பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22 ஊருக்குள் ஒரு புரட்சி மாட்டேன்னுட்டாங்களே... எல்லாம் கூட்டுக் கள்ளங்க... பாத்துப் படலாம். மாடாச்சு... இல்லன்னா உயிராச்சு. ஆறு மாதத்திற்கு முன்பு, பரமசிவம், ஆண்டியப்பனிடம், "இதுல ஒரு கையெழுத்துப் போடுடா... சொசைட்டில மாமா ஒன்னச் சேர்க்கப் போறேன்னு" சொல்லி அவனிடம் ஒரு கையெழுத்து வாங்கின்ார். பிறகு, தன் சட்டைப் பையில் இருந்து, இருபத்தோரு ரூபாய் நீட்டி, "இத... உன் பேர்ல... சொசைட்டில கட்டிடு" என்றார். மறுநாள் ஆண்டியப்பன், "இந்தாரும் மாமா பத்து ரூபா... மீதி பதினோரு ரூபாய் வேல பாத்து கழிச்சுடுறேன்" என்றான். பரமசிவம். வாரத்துக்கு நூறு ரூபாய்க்கு ஐந்து ரூபாய் வட்டி வாங்கும் அந்த வள்ளல், "ஒன் பணம் வேற... என் பணம் வேறயால..." என்று பதறிச் சொன்ன போது, ஆண்டி, "தாயா பிள்ளயா இருந்தாலும் வாய் வயிறு வேறதான மாமா" என்று பக்குவமாகச் சொல்லி, பணத்தை அவர் பைக்குள் திணித்துவிட்டான். அப்புறம், ஒரு மாதத்திற்கு முன்பு அவர் கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் போய், நீட்டிய இடத்தில் கையெழுத்துப் போட்டான். புராஜெக்ட் ஆபீஸர், அவனுக்கு, நிலமில்லாத ஏழை என்பதற்கு அடையாளமாக ஒரு எல்' கார்ட் கொடுத்தார். பச்சை நிறம். தபால் கார்ட் அளவு. அவன் பெயர், முகவரி எல்லாம் அதில் உள்ளன. அந்த கார்டுக்காகவும், கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர் ஆனதாலும், மாடு கிடைத்திருக்கிறது. அப்ளிகேஷனில் போட்ட கையெழுத்து, அவன் சொந்தக் கையெழுத்து. இந்த மாடும் அவனுக்கே சொந்தம். என்ன வந்தாலும் சரி... முடியாது. கொடுக்க முடியாது. உள்ளத்தில் ஒரு பக்கம் உறுதி தோன்றினாலும், இன்னொரு பக்கம் கவலை தோன்றியது. படித்த இளைஞர்கள். இளைஞர் நற்பணி மன்றத்தைத் துவக்கிய போது அதிகமாக ஆனந்தப்பட்டவன் ஆண்டியப்பன். ஆனால் நான்கு நாட்களுக்கு முன்னால் குமார், மேடையில் பேசிய விதம், அவனுக்கு தன்னை யாரோ குரல்வளையை நெரிப்பது போலிருந்தது. வாங்கிய மாட்டைக் கட்டிவிட்டு அவன் ஊர்ப்பாலத்திற்குப் போனான். அவன் போகுமுன்பே, பெரிய கலாட்டா. குமார் பங்காளிகளும், மாணிக்கம் பங்காளிகளும் ஒருவரை ஒருவர் அடிக்கப் போனார்கள். இளைஞர் மோதல், ஊர்ச் சண்டையாக மாறுமளவிற்குப் போய்விட்டது. கடைசியில் ஆண்டியப்பன்தான் விலக்குத் தீர்த்தான். இப்போது குமார், இளைஞர் பெரும்பணி மன்றம்' என்று ஒன்றைத் துவக்கி இருக்கிறான். பஞ்சாயத்துத் தலைவருடன் பேசிக்கொண்டும், அவர் மகள் பத்மாவைப் பார்த்துக் கொண்டும் இருக்கிறானாம். அமைச்சருடன் அரை நிமிடம் பேசியதால் அவனுக்கு புதிய செல்வாக்கு