பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 23 ஏற்பட்டிருக்கிறது. வேலை தேடி அலையும் எல்லாப் பயல்களும் அவன் மன்றத்தில் சேர்ந்ததால் ஒரிஜினல் மன்றம், கழுதை தேய்ந்து கட்டெறும்பாய் மாறிய கதையாகப் போய்க் கொண்டிருந்தது. சிந்தனையில் இருந்து விடுபடாமலே அவன் எழுந்தான். வீட்டுத் திண்ணைக்கு வந்து உள்ளே எட்டிப் பார்த்தான். உள்ளே அவன் தங்கை மீனாட்சி மல்லாந்து படுத்துக் கிடந்தாள். ஒரு மாதத்திற்கு முன்பு குழந்தை பிறந்தது. ஆனால் அவளால் பால் கொடுக்க முடியாத அளவுக்கு, மார்பகத்தில் கட்டிகள் வந்தன. ஆளை வண்டியில் ஏற்றி, பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்கருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கூட்டிப் போனான். அங்கே டாக்டர்கள் இல்லை. அதே டவுனில் பிராக்டிஸ் பண்ணப் போய்விட்டார்களாம். என்ன செய்வதென்று தெரியாமல், அவன் தவித்தபோது ஆஸ்பத்திரி ஆயா, அவர்களை கடுமையாகப் பார்த்தாள். அந்தப் பார்வையிலேயே மீனாட்சிக்கு இன்னொரு கட்டி வரும் போலிருந்தது. இறுதியில் அவள் 'மூக்குத்தியை மார்வாடியிடம் அடகு வைத்து, பிரைவேட் டாக்டரிடம் காட்டினான். மீனாட்சிக்கு புண் ஓரளவு சுகப்பட்டாலும், வலி நிற்கவில்லை. வேறு வழியில்லாமல், மீண்டும் போனான். அப்போது முன்பிருந்த ஆயாகூட இல்லை. - ஆண்டியப்பன், தன் வெள்ளிக்கொடியை அடகு வைத்து, 'பிரைவேட் டாக்டரிடம் போனான். சுரந்த பால் வெளியேற முடியாமல் இருப்பதால், வலியெடுப்பது கண்டு பிடிக்கப்பட்டு, டாக்டர், பால் சுரக்காமல் இருக்க மாத்திரை கொடுத்தார். இந்த வகையில், இருநூறு ரூபாய் செலவாகிவிட்டது. இப்படி அவன் கடன்பட்டதுக்கு, சரியாகப் பணிபுரியாத அரசாங்க டாக்டர்களே காரணம் என்று அவன் நினைக்க நினைக்க, தன்னிடம். ஒவ்வொரு டாக்டரும் கடன் பட்டிருப்பது போல் அவனுக்குத் தோன்றியது. ஆண்டியப்பன், திண்ணையில் நின்றபடியே உள்ளே எட்டிப் பார்த்துவிட்டு. மெய்சிலிர்த்து நின்றான். சின்னானின் அக்கா காத்தாயி, தன் கைப்பிள்ளையை தங்கம்மா விடம் கொடுத்துவிட்டு, மீனாட்சியின் குழந்தையை எடுத்து, பால் கொடுத்துக் கொண்டிருந்தாள். ஏற்கெனவே, கொத்தவரைக்காய்போல் இருக்கும் இந்த ஹரிஜனப் பெண், தன் நோஞ்சான் பிள்ளைக்கே பாலில்லாத இந்த இளம்பெண், தங்கையின் பிள்ளைக்குப் பால் கொடுப்பதை நினைக்க நினைக்க ஆண்டியப்பனுக்கு. அவள் காலைத் தொட்டுக் கும்பிட வேண்டும் என்பது போலவும், அவளைப் பார்த்து 'அம்மா... அம்மா...' என்று கத்த வேண்டும் போலவும் தோன்றியது. மீனாட்சி, காத்தாயியிடம் புலம்புவது. அவனுக்கு நன்றாகக் கேட்டது.