பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ஊருக்குள் ஒரு புரட்சி "பாரு... காத்தாயி... அந்த மனுஷன் குழந்தய பாக்க வந்தாரா... இல்ல என் மூக்குத்திய பாக்க வந்தாரான்னு தெரியல. வந்ததும் வராததுமா மூக்குத்திய எங்கன்னு கேட்டாரு... நான் பதில் சொல்லு றதுக்கு முன்னாலயே... ஒண்ணன் வித்துத் தின்னுப்புட்டானா... பெருச்சாளிப் பயன்னு தாம் துமுன்னு குதிச்சிட்டுப் போயிட்டாரு... பிள்ளயப் பாக்கவே இல்லை... பிள்ளைய." "அழாதீங்கம்மா... அதுக்காவ நீங்க எங்கண்ணன் நடந்துபோற தூசில, அறுந்துபோற துசிக்கு பெறுவியரா? எங்கண்ணன... சொன்னா... ஒம்ம வாயில கட்டி வருமுன்னு சொல்லியிருக்கப்படாது. இப்போ அவருக்கு வாயில கட்டி வந்திருக்காம்... யாரையும் திட்ட முடியலியாம். நேற்று குட்டாம்பட்டிக்கு பெட்டி விக்கப் போன எங்க பெரிய்யா மவள் சொர்ணம் சொன்னாள்..." மீனாட்சி பதறினாள். "அய்யய்யோ... கட்டி வந்துருக்காம காத்தாயி... நீ நல்லா இருப்ப... இப்பவே போயி பார்த்துட்டு வருவியா... நான் சண்டாளி... எந்த நேரத்துல வாய் திறந்தேனோ... பாவி மனுஷன் எப்படிச் சாப்பிடுவார்? வயித்துக்குள்ள ஒண்ணுமில்லாத சமயத்துல, வாய்க்குள்ள கெட்ட வார்த்தய வச்சுக்கிட்டு துப்புற மனுஷனாச்சே காத்தாயி... காத்தாயி..." "சும்மா கிடங்கம்மா...கட்டுன பெண்டாட்டியையும், பெத்த பிள்ளையையும்விட மூக்குத்திய பெரிசா நினைச்ச மனுஷன் கொஞ்ச நாளைக்கி லோலு படட்டும்." "அப்படிச் சொல்லாத காத்தாயி... அவரு நல்ல மனுஷன்தான். சின்னப்பிள்ள மாதுரி சூதுவுாது தெரியாத மனுஷன். ஆனால்... என் மாமியார் இருக்காளே... அவாதான் மூளியலங்காரி... மூதேவி சண்டாளி... அவள் போடுற சாம்பிராணி புகையிலதான். இந்த மனுஷன் குதிப்பாரு... அப்புறம், அழுதுகிட்டு இருக்கிற என்கிட்ட வந்து என் கண்ணத் துடைச்சிட்டு, ரகசியமா வாங்கி வந்த அல்வாவ வாயில ஊட்டுவாரு..." மீனாட்சி, வெட்கப்பட்டுக் கண்களைப் பொத்திக் கொண்டாள். காத்தாயியின் குழந்தைக்கு. முத்தமாரி பொழிந்து கொண்டிருந்த தங்கம்மா. அண்ணியையே பார்த்தாள். உடனே, அவளுக்கும், ஆண்டியப்பனின் நினைவு தற்செயலாக வர, வெளியே எட்டிப் பார்த்து, சுவரோடு சுவராக நின்ற ஆண்டியப்பனை அதட்டினாள். "பொம்புளய பேசுற இடத்துல உமக்கென்ன வேல...?" ஆண்டியப்பன், தனக்கு வேலை இருப்பதுபோல், உள்ளே வந்தான். தங்கையைப் பார்த்து "கவலப்படாத... நானே போய் மாப்பிள்ளய பார்த்துட்டு வாரேன்" என்றதும், அல்வா சமாச்சாரம் அண்ணனுக்கும் தெரிந்து விட்டதே என்று நாணப்பட்டாள்.