பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம் 29 போவட்டும். இது ஒம்ம மாடு... போலிஸ்ல சொல்லலாம். போன மாடு தானா வரும். விட்டுடுமய்யா... விட்டுடு முதலாளி..." என்றாள். இந்தச் சமயத்தில், பனைமரத்தடியருகே நின்ற இளைஞர் கோஷ்டியின் ஆலோசகர் மாசானமும், அங்கிருந்து நகராமலே "ஆமாண்டா... மாட்ட இப்ப விடு... பாக்க வேண்டிய இடத்துல, பாக்க வேண்டியதப் பாத்துப் புடலாம்..." என்றார். மாட்டை அவிழ்த்துவிட்டு, கன்றை அவிழ்க்கப் போன அடைக்கலசாமியிடம், "மாட்ட கொண்டு போறக் கையோட, என் தலையயும் கொண்டு போயிடும்" என்று சொல்லி, அரிவாளை அவரிடம் நீட்ட, அவர் அதை வாங்கி, தூரமாக எறிந்துவிட்டு, கன்றை அவிழ்த்தார். இதற்குள் சத்தம் கேட்டு, கூட்டம் கூடிவிட்டது. மீசைக்காரன் .ட்பட. பண்ணையாட்களும் வந்து விட்டார்கள். அடைக்கலசாமி, அவிழ்த்த மாட்டையும் கன்றையும் பண்ணையாள் ஒருவரிடம் கொடுத்து "நீயே... இந்த ரெண்டயும் கட்டு இந்தக் கயிறுல... கொஞ்சத்த வேணுமுன்னா கொடு. தூக்குப் போட்டுச் சாவணும்" என்று சொல்லிக் கொண்டே வடக்குப் பக்கமாகப் போனார். பண்ணையாட்கள். மாட்டோடும் கன்றோடும் தெற்குப் பக்கமாகப் போனார்கள். மாடு, மிரண்டு மிரண்டு பார்த்தது. ஆண்டியப்பனிடம் வரத் துடிப்பது போல், பண்ணையாட்களை உதறிக் கொண்டே ம்மா... ம்மா..." என்றது. அதன் கழுத்தில், ஆண்டியப்பன் வாங்கிப் போட்டிருந்த மணி, தாளத்துடன் ஒலிக்க கிட்டத்தட்ட மாட்டின் சத்தம். ஒப்பாரி போல் கேட்டது. மாடு சண்டித்தனம் செய்வதைப் புரிந்து கொண்ட மீசைக்காரன் அதன் கன்றை, வலுக்கட்டாயமாக தரதரவென்று இழுத்தான். அது நகராமல் போனதால், அதை சிரமப்பட்டுத் தூக்கிக் கொண்டு போனான். இப்போது, அந்த ஜெர்ஸி இனக் கலப்புப் பசு, தாய்மைக் காந்தத்தால் இழுக்கப்பட்டு தானாக நடந்தது. மாடு போவதை விட, தன் மானம், மரியாதை, கவுரவம் எல்லாம் தன்னை நிர்க்கதியாக விட்டு விட்டுப் போவது போல் ஆண்டியப்பன் செய்வதறியாது திகைத்து நின்றான். பிறகு ஆவேசப்பட்டவன் போல், தரையில், கிடந்த அரிவாளை உஷ்ணமாகப் பார்த்தபோது, அவனது பனை மரத்தடி சகாக்கள் அதன் நிழலைப் போல அவனருகே வந்து, அவனது கைகால்களைப் பிடித்துக் கொள்ள, மாசானம், "பொறுடா... மாடு எங்க போயிடப் போவுது... இந்த பரமசிவம் எங்க போயிடப் போறான். நாங்க எங்க போயிடப் போறோம். இந்த ஒண்னு போதாது. அவன... பஞ்சாயத்துத் தேர்தலுல தோற்கடிக்கதுக்கு..." என்றார். பஞ்சாயத்துத் தேர்தல் முடிவது வரைக்கும். போன பசுமாடு, அவனுக்குக் கிடைக்கக் கூடாது என்று அவரே நினைப்பதுபோல், அவரது ஒவ்வொரு வார்த்தையும் ஒன்றன்பின் ஒன்றாக தாமதமாக வந்தன.