பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 ஊருக்குள் ஒரு புரட்சி தங்கம்மா, வெளியே ஆண்டியப்பனைப் பார்த்தாள். பிறகு, தன்னைத்தானே சிலிர்த்துக் கொண்டு "மன்னிப்புன்னு வந்துதுன்னா... முதல்ல... அதுதான் கேக்கணும். எங்க அத்த மகனை... காரணமில்லாம திட்டுனால், நான் கேட்டுக்கிட்டு இருக்கணுமா?" என்றாள். மல்லிகா, ஆட்கள் இருக்கிற தைரியத்தில் அதட்டினாள். "அது இதுன்னு பேசுனால், கெட்ட கோபம் வரும். நான் என்ன ஆடு upstiff...?" கிராம முன்சீப் சிலிர்த்தெழுந்தார். "ஒன் அய்யா முகத்துக்காவ பாக்கேன். இல்லன்னா...நீ. என் மகளr பேசியிருக்கிற பேச்சுக்கு, சுண்ணாம்புக் காளவாசலுல வச்சி..." சரோஜா அம்மையார், அரசியல்வாதியானார்: "அய்யா கேக்குறார் இல்ல. அவருக்கு மரியாத கொடுக்கிறதுக் காவது, தெரியாமப் பேசிட்டேன்னு ஒரு வார்த்த சொல்லேன்... இவ மூணு நாளா... கன்னம் வீங்கும்படியா அழுதுகிட்டு கிடந்தாள். நாங்ககூட. அவளை நீன்னு சொன்னதுல்ல. பெத்த அப்பனுக்கு மரியாதை கொடுக்கவளா இருந்தால், இந்நேரம் , அவரு சொன்னது மாதுரி கேட்டிருப்பே. நிதான். அப்பனையே... மதிக்காதவளாச்சே." 'தங்கம்மா, ஊன்றிய கையை எடுத்து. ஆள்காட்டி விரலை நீட்டிக் கொண்டு "சும்மா... வாழப்பழத்துல ஊசியை ஏத்தறது மாதிரி பேசாண்டாம்மா... ஒவ்வொருத்திவ... கட்டுன புருஷனையே மதிக்காம சிலுப்பிகிட்டு பிறத்தியாருக்கு உபதேசம் பண்ண வந்துடுறாவ. இவரு... இந்த வீட்ல. இருக்கதுவரைக்கும். என்னை பெத்த ஐயா இல்ல. ஒங்களோட வேலக்காரர். என் உயிரு போனாலும் போவுமே தவிர என் வாயில இருந்து நீங்க விரும்புறது மாதுரி வார்த்த வராது..." பெண்டாட்டி மதிக்கவில்லை என்கிற சமாச்சாரம், இந்த வேலக்காரப்பய மவளுக்கும் தெரிஞ்சிப் போச்சே என்ற ரகசியமான ஆத்திரத்தில், முன்சீப் ஐயா எழுந்தார். "நீ மட்டும் என் மகளாக இருந்திருந்தால், இந்நேரம் கொண்டையைப் பிடிச்சி, திருவு திருவுன்னு திருவியிருப்பேன்" என்று சரோஜா அம்மையார் சொன்னார். அடைக்கலசாமி, ஆவேச சாமியானார். திடீரென்று மகள்மீது பாய்ந்து, அவள் தலைமுடியைப் பிடித்து கைக்குள் சுற்றிக் கொண்டு, மகளின் முதுகில் பலங்கொண்ட மட்டும் குத்தினார். அய்யோ... போனேனே...' என்று வாய் வரைக்கும் வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டே, தங்கம்மா, அப்பாவின் கையைப் பிடித்து, தலையை உதற உதற. அவளுக்கு வேதனை விஸ்வரூபமாகியது. எப்படியோ அவரிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, நாலடி தள்ளிப் போய் நின்று கொண்டாள்.