பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

க. சமுத்திரம் 37 இதுவரை, அய்யாவிடம் ஒரு தடவை கூட அடிபடாத தனக்கு-திட்டித் தொலைக்கும் அம்மாவைக்கூட என் மகள... பேசுனியானா குழிவெட்டிப் புதச்சிடுவேன்' என்று சிங்கம் போல் கர்ஜிக்கும் பெற்றவன், நான்கு பேர் முன்னிலையில் அடித்த அடியின் வலியைவிட, அதன் காரண காரியம், அவள் இதயத்தில் பெரும் வலியைக் கொடுத்தது. விம்மப் போனாள். 'அய்யோ... அய்யோ...' என்று அழப்போனாள். 'என்னையா... அடிச்சியரு. என்னையா அடிச்சியரு என்று கத்தி, தன் தலையிலே கூட, கைகளைப் பாயவிடப் போனாள். திடீரென்று, அவள் கண்கள் மல்லி காவைப் பார்த்தன. அதில் ஜொலித்த அகங்காரத்தையும், உதட்டோரத்தை விரித்த குறுஞ்சிரிப்பையும் பார்த்தன. எதுவுமே நடவாததுபோல் இருந்த சரோஜாவைப் பார்த்தன. அவ்வளவுதான். நீரை விழவைக்கப்போன கண்கள். இப்போது நெருப்பைக் கொட்டின. உள்ளத்து ஒலம், போர்ப்பரணியாகியது. இயலாமை, எதிர்ப்பாக மாறியது. தங்கம்மா, மல்லிகாவை, அவளும் அவள் பெற்றோரும் பயப்படும் அளவுக்கு சற்று நெருங்கிக் கொண்டு, அழுத்தந் திருத்தமாகப் பேசினாள். "அடியே... மல்லிகா... குதிரக் கொண்டை... என்னை... பழி வாங்கிட் டதா நினைக்காதடி... நானாவது... எங்கய்யாகிட்டதாண்டி அடிபட்டேன். ஒன் அகங்காரத்துக்கும் மண்டக்கனத்துக்கும் நீஊர்ல அடிபடப் போற காலம் வரப் போல்துடி. எனக்கு அடி வாங்கிக் கொடுத்துட்டதா நினைக்காதடி. இப்போ எங்கய்யா என்னை அடிச்ச அடி பிட்டுக்கு மண்சுமந்த பரமசிவத்தை. பாண்டிய ராஜா அடிச்சது மாதுரியான அடிடி... இந்த அடி. ஒங்களமாதுரி, அக்கிரமக்காரங்க ஒவ்வொருவர் மேலயும் படப்போவுதடி..." மல்லிகா வாயடைத்துப் போய் எழுந்தபோது, அடைக்கலசாமி, அருகே கிடந்த ஒரு தார்க் கம்பை எடுத்துக் கொண்டு. மகளை நோக்கி ஒடினார். திடீரென்று அவருக்கும், தங்கம்மாவுக்கும் இடையே ஒரு உருவம் வந்து நின்றது. கடுமையான கோபம், மேனியெங்கும் ஆடுவது போல் உடலெல்லாம் சிலிர்த்து நிற்க, உயிரையே பணயம் வைக்கத் தயாராவது போல், அந்த கம்பீர உருவம், கிழவரையும், மகளையும் மாறி மாறிப் பார்த்தது. ஆண்டியப்பன் மாட்டைப் பறிகொடுத்துவிட்டு, மாமன் மகளையும் பறிகொடுத்தாலும் அவளைப் பலி கொடுக்கச் சம்மதிக்காத ஒரு ஏழை. கம்பீரமாக சவாலிட்டான். "இனிமேல்... அவள் மேல்... ஒரு அடி விழுந்தாலும், இப்பவே கொலை விழும். ஒரு கொலையோட நிக்காது. வேணுமுன்னால் அடிச்சிப் பாக்கட்டும்."