பக்கம்:ஊருக்குள் ஒரு புரட்சி.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க. சமுத்திரம் 39 வாரேன்... கடைசில... என்னடான்னா... எனக்குத்தான் கெட்டபேரு... என் ஜாதகமே அப்படி... சின்ன வயசில இருந்து இப்படி..." சரோஜா அம்மா புரிந்துகொண்டாள். சின்ன வயதில், தான் காதலித்து கட்டிப்பிடித்த மாசான மச்சான் கருவாட்டு ஜாதகத்தால், தன்னை மணக்க முடியாமல் போனதை சுட்டிக் காட்டுவதைப் புரிந்து கொண்டு, அந்த ஐம்பது வயதுக்காரி, இப்போது இருபது வயதுக் காரியாகித் தவித்தாள். எப்பவோ... நடந்தது. இப்பத்தான் நடந்தது மாதிரி இருக்கே... வாலிபத்தைத் திரும்ப வரவழைத்துக் கொண்டிருந்த இரண்டு முதியவர்களின் புனிதக் காதல் தாபங்களைப் புரிந்து கொள்ளாத மணியக்காரர் தன்பாட்டுக்குப் பேசினார். "ஒரு கொலையோட நிக்காதுன்னு இவன் மிரட்டுறான். இவனுக்கா நான் ரிப்போர்ட் கொடுக்கணும். நல்லா இருக்கே... நியாயம்." இ.ந. மன்றத்தின் உதவித் தலைவர் கோபால், பதிலளித்தான். "நியாயம்... நல்லா இருக்கணும் பெரியப்பா... அதுக்காகத்தான் வந்தோம். பரமசிவம் மாமா தூண்டுதலுல... இவனோட மாட்ட. இவரு பிடிச்சிக்கிட்டு போயிட்டார். வேணுமுன்னா... இப்பவே இவர விசாரியும். நீரு... ஒரு ரிப்போர்ட் கொடுத்தால்... நாங்க போலீஸ்ல கம்ளெயிண்ட் கொடுக்க வசதியா இருக்கும். அதோட இது ஒம்மோட கடமை... முடியாதுன்னு சொல்றதுக்கு உரிமை இல்லாத கடமை..." மணியக்காரர். மார்தட்டிப் பேசினார்: "ஊர குட்டப் புழுதியாக்குறதுன்னு தீர்மானம் பண்ணிட்டிய...! பரவாயில்ல... நான் ரிப்போர்ட்டும் தர முடியாது. வேணுமுன்னால்... என்னைப்பற்றி... தாசில்தார்கிட்ட ரிப்போர்ட் பண்ணிக்கங்க..." வேறு வழியில்லாமல், நற்பணிக்காரர்கள் வெளியே வந்தார்கள். மாணிக்கம், மல்லிகாவை திரும்பிப் பார்த்தான். அவள். அவனையே பார்த்துக்கொண்டு இருந்தாள். "ஒனக்கு வேணும் மல்லிகா... நீ எதுக்காக... பிறத்தியாருக்கு வக்காலத்து வாங்கணும்... இப்போ... நடக்கத பாத்தியா...?" என்று சரோஜா, மகளிடம் கோபமாகப் பேசுவது மாணிக்கத்தின் காது வழியாக இதயத்தைக் குத்தியது. இருந்தாலும், இ. ந. மன்றத்தின் தலைவன் அவன்... ஒரு லட்சிய புருஷன். படுகளத்தில் காதல் ஒப்பாரி வைக்கலாகாது! மாசானம் அந்த இளைஞர்களை பத்து கிலோ மீட்டர் தொலைவிலுள்ள பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்திற்குக் கொண்டு போனார். அவர்களை ஆணையாளரின் முன்னால் நிறுத்திவிட்டு, அருகேயுள்ள அறையில் வரைபடங்களை முறைத்துக் கொண்டிருந்த யூனியன் எஞ்ஜினியரின் காதை கடிக்கப் போய்விட்டார்.